கடந்த பிப்ரவரி மாதம் பிரதீப் ரங்கநாதனுக்கு டிராகன் திரைப்படம் வெளியானது. அஸ்வந்த் மாரிமுத்து இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் இந்தத் திரைப்படம் இருந்ததால், டிராகன் திரைப்படம் வாகை சூடியது. இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் திரைப்படம்தான் டியூட்.
சுதா கொங்கராவிடம் உதவியாளராக இருந்த கீர்த்தீஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். மைத்ரி மூவிஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, மார்க்கெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. திரையரங்கு முதல் ஓடிடி வரை போட்டி போட்டு இந்த திரைப்படத்தின் உரிமம் பெறப்பட்டது.
இதற்கு மிக முக்கிய காரணம் பிரதீப் ரங்கநாதன் தான். இன்றைய இளைய தலைமுறை மத்தியில், பெரும் நட்சத்திரமாக அவர் வலம் வருகிறார். இப்படியான சூழலில்தான் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது டியூட். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தையே இந்த திரைப்படம் பெற்றிருக்கிறது.
வாழ்க்கையில் எதையும் கூலாகவே ஹேண்டில் செய்யும் அகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அவரது மாமாவின் மகளாக குறள் என்னும் ரோலில் வருகிறார் மமீதா பைஜூ. பிரதீப் ரங்கநாதனின் மாமாவாக அதியமான் என்னும் அமைச்சர் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். ஈவன்ட் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வரும் பிரதீப் ரங்கநாதனை, ஒரு கட்டத்தில் காதலிப்பதாக கூறுகிறார் மமீதா பைஜூ.
ஆனால் அதனை ஏற்க மறுக்கிறார் பிரதீப் ரங்கநாதன். நாம் நட்பாகவே பழகி விட்டதால் காதல் வேண்டாம் என்கிறார். இதனால் கலங்கி போகும் மமீதா பைஜூ, மேற்கொண்டு படிப்பதற்காக வெளியூர் செல்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், மமீதா மீது பிரதீப் ரங்கநாதனுக்கு காதல் வருகிறது. இது பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணத்துக்கு செல்ல, இந்த முறை திருமணம் வேண்டாம் என்று சொல்கிறார் மமீதா. வெளியூருக்கு சென்ற இடத்தில் அவர் வேறு ஒருவர் மீது காதல் கொள்கிறார்.
இதன் நடுவே வேறு சாதி நபரை காதல் செய்ததற்காக தனது தங்கை என்றும் பாராமல் சரத்குமார் முன்பு ஒரு காலத்தில் அவரை கொலை செய்தது பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதாவுக்கு தெரிய வருகிறது. இதனால், பிரதீப் மமீதா இருவரும் திருமணம் செய்து கொள்ள, பிறகு என்ன நடந்தது என்பதுதான் டியூட் திரைப்படத்தின் கதை. முற்போக்கான சில விஷயங்களை கூறியிருந்தாலும் அதை திரைக்கதையில் சரியான விதத்தில் கடத்தாததால் இரண்டாம் பாதி சோகமாகவே அமைந்திருக்கிறது. படம் முடியும் வரை அது மீண்டும் வராததால் கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது டியூட் திரைப்படம்.





