தமிழ் சினிமாவில் குடும்பக்கதை திரைப்படங்களில் ரசிகர்களின் மனங்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் விசு. இப்போதும் டிவியில் சம்சாரம் அது மின்சாரம் படத்தை ஒளிபரப்பினால் காட்சிக்கு காட்சி ரசிக்கும்படியான விஷயங்களும் வசனங்களும் அந்த படத்தில் நிறைந்திருக்கின்றன.
நடிகர் விசு முதலில் நிறைய நாடகங்களை நிகழ்த்திக் காட்டியவர். அதன்பிறகு ஒரு கட்டத்தில் நல்ல நாடகங்களை திரைப்படங்களாக்கி மக்களின் பார்வைக்கு தியேட்டர்களுக்கு கொண்டு வந்தார். சன் டிவியில் அவர் நடத்திய அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர் கூட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் பிரபு சுகன்யா ராதாரவி சிவரஞ்சனி மண்ணாங்கட்டி சுப்ரமணியம் வெண்ணிற ஆடை மூர்த்தி விசு உள்ளிட்டோர் நடித்த படம் சின்ன மாப்ளே. இந்த படத்தை அம்மா கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் டி சிவா தயாரித்திருந்தார். இந்த படத்தில் திருமண தரகர் கேரக்டரில் நடிகர் விசு நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி சிவா கூறியதாவது, படப்பிடிப்பு நடந்த போது ஒரு நாள், விசு சென்னைக்கு செல்ல வேண்டும். கோபி செட்டிபாளையத்தில் இருந்த அவர் சென்னைக்கு ரயிலில் போக வேண்டும். போதிய பிளைட் வசதி எல்லாம் அப்போது இல்லை.
இப்போது போல் ஆன்லைன் ரயில் முன்பதிவு வசதியும் அப்போது இல்லை. ஏஜன்ட் மூலம் டிக்கெட் போடவும் முடியாது. எப்படியோ குழப்பமாகி கடைசி நேரத்தில் சென்னைக்கு செல்ல நடிகர் விசுவுக்கு ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகாமல் போய்விட்டது. அதனால் செகன்ட் கிளாஸில் சிட்டிங்கில் அவர் பயணித்து சென்னைக்கு போனார். இதை கேள்விப்பட்டு நான் பதறி விட்டேன். விசு சாரிடம் கார் அனுப்புகிறேன் என்றபோது, சென்னைக்கு அவ்வளவு தூரம் காரில் போக முடியாது என்றும் சொல்லி விட்டார்.
செகண்ட் கிளாஸில் பாசஞ்சர்ஸ்ல உட்கார்ந்துட்டு நைட் முழுக்க தூங்கிட்டு பயணம் செஞ்சிருக்கார். இரண்டு நாள் கழித்து நான் சென்னை போனதும் அவரை நேரில் பார்த்து காலை தொட்டு மன்னிப்பு கேட்டேன். பரவாயில்ல விடுங்க, தவிர்க்க முடியாம அப்படி நடந்துடுச்சு, ஒரு நாள் ஷூட்டிங்குல உட்கார்ந்த மாதிரி நினைச்சுக்கிறேன் விடுங்க, என்று பெருந்தன்மையாக விசு சொன்னார் என டி சிவா கூறியிருக்கிறார்.





