தமிழ் சினிமாவில் நடிகைகள் அம்பிகா ராதா இருவருமே பெரிய நட்சத்திர நடிகைகளாக கடந்த 1980 90களில் இருந்தனர். ரஜினி கமல் கார்த்திக் பிரபு விஜயகாந்த் சத்யராஜ் என நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர்கள். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பிற மொழி படங்களிலும் ஏராளமாக அம்பிகா ராதா நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் தன்னுடைய அக்கா அம்பிகாவும், தம்பி மல்லிகார்ஜூனா குஞ்சன் என்பவரும் சேர்ந்துக்கொண்டு தன்னுடைய வங்கி கணக்கில் ரூ. 46 கோடி செக்குகளை செலுத்தி மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நடிகை ராதா கூறியதாவது, எனக்கு ஆஆர் கார்டன்ஸ் னு போரூர்ல இடம் இருக்கு. 2006ம் ஆண்டில் குடும்பப் பிரிவினை முடிந்த பிறகு எனக்கு இந்த சொத்து கொடுக்கப்பட்டது. அதை நான் டெவலப் பண்ணிட்டு வருகிறேன்.
என் அக்காவுக்கும் தனியாக பெரிய பில்டிங் கொடுத்தாங்க.
நான் பிசினஸ் விஷயமாக மும்பை கேரளாவில் மாறி மாறி போறதால் ஆபீஸ்ல கையெழுத்து போட்ட காலியான செக்குகளை வைத்திருப்பேன். என் குடும்பத்தை நம்பித்தான் எல்லாத்தையும் வச்சிட்டு போனேன். அவங்க இப்படி செய்வாங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல. கடந்த 16ம் தேதி என் பேங்கில் இருந்து ஒரு அலர்ட் எஸ்எம்எஸ் வந்தது. அதிலிருந்த தொகையை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த அளவுக்கு நான் சம்பாதிக்கிற ஆள் கூட கிடையாது.
உடனே பேங்குக்கு போன் பண்ணி அந்த செக்குகளை ஸ்டாப் பண்ணிட்டேன். ஆனா அதே செக்குகளை மறுபடியும் 18ம் தேதியும் கொண்டு போய் பேங்க்ல போட்டு இருக்காங்க. ஒரே தப்பை இரண்டு முறை பண்ணி இருக்காங்கன்னா அவங்களோட மோட்டிவேஷன் என்னன்னு தெரியணும். அதற்காகத்தான் நான் புகார் கொடுக்க இங்கே வந்திருக்கிறேன். செக்கை யார் கொண்டு வந்து போட்டது என எனக்கு தெரிய வேண்டும்.
அம்பிகா அக்கா பெயரில் தான் செக் இருக்கிறது. என்னுடைய தம்பி மல்லிகார்ஜூனா மேலயும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. இதில் 2 பேரும் சேர்ந்து செயல்பட்டாங்களா, இல்ல வேறு ஏதும் நோக்கம் இருக்கான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. ஏற்கனவே என் தம்பி மேல பல புகார்கள் இருக்கு. இந்த விஷயம் தெரிந்ததும் என் அக்கா அம்பிகாவுக்கு போன் பண்ணினேன். ஆனா அவங்க என் போனை எடுக்கவே இல்லை. அதனால்தான் வேற வழி இல்லாம புகார் கொடுக்க கமிஷனர் ஆபீஸ் வந்தேன் என்று நடிகை ராதா செய்தியாளர்களிடம் கண் கலங்கியபடி கூறினார்.





