தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடன கலைஞராக அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ். அங்கிருந்து மெல்ல மெல்ல தனது திறமையை வளர்த்துக் கொண்ட அவர், அமர்க்களம் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு திரையில் வந்து போனார். பிறகு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கவும் செய்தார். ஆனால் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை.
பிறகு இயக்கத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார். தெலுங்கில் நாகர்ஜூனாவை வைத்து மாஸ் என்னும் படத்தை அவர் இயக்கினார். பின்னர் தமிழுக்கு வந்த அவர், ஹாரர் கான்செப்ட்டை கையில் எடுத்து அது தொடர்பான படங்களை எடுக்க ஆரம்பித்தார்.
இதில் ராகவா லாரன்ஸ்க்கு முதல் திரைப்படமாக முனி அமைந்தது. ராஜ்கிரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. தமிழில் லாரன்ஸ் இயக்கத்தில் கிடைத்த முதல் வெற்றியாக இது அமைந்தது. இதன்பிறகு இந்த ரூட்டையே கையில் எடுக்க ஆரம்பித்தார் ராகவா லாரன்ஸ்.
இப்படித்தான் உருவாகியது காஞ்சனா திரைப்படம். தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய்த் திரைப்படங்கள் வந்திருக்கலாம். ஆனால் அவற்றிற்கெல்லாம் சற்று விலகி வேறு ஒரு பரிணாமத்தில் நாம் காஞ்சனா திரைப்படத்தை கூறலாம். வழக்கம்போல் ஒரு பங்களா, அதில் பதுங்கி இருக்கும் பேய், பிறகு அது கதாநாயகனின் உடலுக்குள் செல்வது என வழக்கமான கான்செப்ட் தான் இதிலும் இடம்பெற்றிருக்கும்.
ஆனால் முதல் முறையாக ஹாரர் திரைப்படத்தில் நகைச்சுவையை புகுத்தி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் ராகவா லாரன்ஸ். சொல்லப்போனால் காஞ்சனா திரைப்படத்தின் முதல் பாகத்தில் கோவை சரளா, திவ்யதர்ஷினி, லாரன்ஸ் ஆகியோரின் காமெடி கலகலக்க வைத்தது. இதன் காரணமாகவே காஞ்சனா திரைப்படம் வெற்றி அடைந்தது. இதன் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களிலும் இதனிலேயே கவனம் செலுத்தினார் லாரன்ஸ்.
தற்போது நான்காம் பாகத்தை எடுக்க சென்று இருக்கிறார். இந்த முறை படத்திற்கு 130 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம். இதில் கதாநாயகியாக வருகிறார் பூஜா ஹெக்டே. இந்த திரைப்படத்தின் கதை பொள்ளாச்சியை மையப்படுத்தி எடுக்கப்படுகிறதாம். தற்போது அங்கு தான் சூட்டிங் நடத்தி வருகிறார் லாரன்ஸ். இந்த ஆண்டு இறுதிக்குள் காஞ்சனா திரைப்படத்தில் நான்காம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





