அண்ணாத்த பட தோல்விக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர்,பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் இந்தப் படத்தில் ரஜினியுடன் பணிபுரிந்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஜரஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்தில் இருந்து வெளியான காவாலய்யா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இதில் ரஜினியை விட தமன்னாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக அவரது ரசிகர்கள் குறை கூறி வந்தனர். அதேசமயம் தமன்னாவின் எடுப்பான நடனத்தை பார்த்து சிலாகித்தவர்கள், பாடலை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இந்த நிலையில், ரஜினி ரசிகர்களை கூல் செய்யும் விதமாக வெளியாகி இருக்கிறது டைகர்கா ஹுக்கும் பாடல். தெறிக்கும் இசையில் அனிருத்தே இந்த பாடலை பாடியிருக்க, அதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வரிகளும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது.
“உன் அலும்ப பாத்தவன், உங்கொப்பன் விசில கேட்டவன், உன் மவனும் பேரனும்… ஆட்டம் போட வெப்பவன், பெயர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு, குட்டிச்செவத்த எட்டி பாத்தா உசுர, கொடுக்க கோடி பேரு” என பாடலில் இடம்பெற்றுள்ள இந்த வரிகள்தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. யாரைக் குறித்து இந்த வரிகள் எல்லாம் எழுதப்பட்டது என்றும், ஒருவேளை அந்த நடிகராக இருக்குமோ எனவும் ரசிகர்களே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக விஜய்க்கு எதிராகத்தான் இந்த வரிகள் இருப்பதாக சிலர் கூறுவதையும் இணையத்தில் பார்க்க முடிகிறது. ரஜினியின் அரசியல் வருகை குறித்து 1990 ஆம் ஆண்டுகளில் இருந்தே பேசப்பட்டு வந்தது. அதற்கேற்றார் போல் ரஜினியின் படங்களிலும் அவர் அரசியல் வருவதற்கான சமிக்கை வசனங்களும் இடம் பெற்று இருந்தன. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு இறுதியில் அரசியலுக்கு வருவதை உறுதி செய்த ரஜினி, அதிசயமும் அற்புதமும் நிகழும் என்று அடித்துக் கூறினார். பின்னர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும், ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார், அரசியலில் தான் இறங்கப் போவதாக அறிவித்தார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் கொரோனா என்னும் பெரும் தொற்று நாட்டையே சூழ தனது முடிவிலிருந்து பின் வாங்கினார் சூப்பர் ஸ்டார்.
இப்படி இருக்க, மறுபக்கம் தளபதி விஜய் எந்த அறிவிப்பும் இல்லாமலேயே மெல்ல மெல்ல அரசியலில் தனது வருகைக்கான காய்களை நகர்த்தி வருகிறார். தளபதி விஜய் இயக்கத்தை ஆரம்பித்து சின்ன சின்ன உதவிகளை தனது ரசிகர்கள் மூலம் செய்து வரும் அவர், சமீபத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து தனது இயக்க நிர்வாகிகளுடனும் கலந்து பேசி வரும் அவர்,மாணவர்களுக்கான இரவு நேர பயிலகத்தையும் ஆரம்பித்துள்ளார்.
ரஜினி மாதிரி இல்லாமல் சொல்லாமலே அவர் அரசியல் வருகைக்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், திரைப்படங்களிலும் விஜய்யின் படமே கொடிகட்டி பறப்பதாகவும் சினிமா விமர்சனங்கள் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தற்போது வியாபாரத்தில் விஜய் படமே முன்னிலையில் இருப்பது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் தான், தனது இருப்பை காட்டும் வகையில் ஜெயிலர் படத்திலிருந்து டைகர்கா ஹுக்கும் பாடல் வெளியாகி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம், எந்த உள்நோக்கமும் கொண்டு இதன் வரிகள் இடம் பெறவில்லை என்று சில சினிமா விமர்சகர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.





