சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கடந்த ஆண்டு வெளியான லால்சலாம் மற்றும் வேட்டையன் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே கலவையான விமர்சனத்தை பெற்றன. இதில் வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்ற நிலையில் லால் சலாம் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படமும் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எந்த ஒரு பெரிய வெற்றி திரைப்படங்களும் அமையாத சூழலில், தற்போது அவர் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். முந்தைய காலங்களில் பாட்ஷா மற்றும் சந்திரமுகி ஆகிய திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கே ரஜினிகாந்த் மறுத்ததாக தகவல்கள் வெளியாகின.
அப்படி இருக்கும் சூழலில் தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் நடித்து வருவது, திரைத்துறையில் கவனத்தைப் பெற்று இருக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இதன் பெரும்பாலான படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். இதன் முதல் பாகத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் மோகன்லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார்கள்.
அவர்கள் இருவருமே இந்த இரண்டாம் பாகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுபோக ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு ஆகியோரும் படத்தில் உள்ளார்கள். மேலும் பெரிய நட்சத்திரங்களையும் நெல்சன் நடிக்க வைத்திருப்பதாக பேசப்படுகிறது. மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.
தெலுங்கு நடிகர் பாலையாவும், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் கெஸ்ட் ரோலில் வருவதாக பேசப்படுகிறது. ஏற்கனவே முதல் பாகத்தில் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டு அது நடக்காமல் போயிருந்ததாக நெல்சன் தெரிவித்திருந்தார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசன் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.
அதற்கு முன்னதாக ஒரு கமர்சியல் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அது வேறு யாருமல்ல மசாலா படங்களைத் தருவதில் கிங் ஆன சுந்தர் சி தானாம். ஏற்கனவே சுந்தர் சி, ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் எனும் வெற்றி திரைப்படத்தை கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவரது இயக்கத்திலேயே ரஜினிகாந்த் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





