தமிழ் சினிமாவில் மக்கள் நாயகன் என அழைக்கப்பட்டவர் நடிகர் ராமராஜன். ரஜினி கமல் விஜயகாந்த் கமர்ஷியல் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெற்ற அதே புகழை செல்வாக்கை இமேஜை கிராமத்து படங்களில் வெகு யதார்த்தமான கதைகளில் கலர் கலர் சட்டையணிந்து நடித்து பெயர் வாங்கியவர்தான் நடிகர் ராமராஜன்.
குறிப்பாக ஊருக்கு கெடுதல் பண்ணும் கிராமத்து பண்ணையார், அதை எதிர்க்கும் நேர்மையான கதாநாயகன், வலிய வலிய வந்து காதலிக்கும் முறைப்பெண் இதுதான் ராமராஜன் படத்தின் கதையாக பெரும்பாலும் இருக்கும். இளையராஜா இசை கவுண்டமணி செந்தில் காமெடி என ராமராஜன் படங்கள் 1980 90களில் தியேட்டர்களில் வசூலை அள்ளிக் குவித்தன.
கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் கனகா கவுண்டமணி செந்தில் கோவை சரளா சண்முகசுந்தரம் வடிவுக்கரசி சந்திரசேகர் கோகிலா சந்தானபாரதி உள்ளிட்டோர் நடித்த படம் கரகாட்டக்காரன். 1987ம் ஆண்டில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பல தியேட்டர்களில் 365 நாட்களுக்கு மேல் ஓடிய மெகா பஸ்டர் படமாக அன்றைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இளையராஜா இசையில் மாங்குயிலே பூங்குயிலே இந்த மான் உந்தன் சொந்த மான் ஊருவிட்டு ஊருவந்து மாரியம்மா மாரியம்மா போன்ற கரகாட்டக்காரன் படப் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி இந்த படத்தில் மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக இருந்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் ராமராஜன் கரகாட்டக்காரன் படம் குறித்து கூறியதாவது, கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி நடித்த தவில்காரர் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் எஸ்எஸ் சந்திரன்தான். அவரை தான் நடிக்க வைப்பது என்ற முடிவில் தயாரிப்பாளர்கள் இருந்தனர்.
ஆனால் அவர் ஒரு கட்சி சார்ந்தவராக இருந்தார். நான் வேறு கட்சி சார்ந்தவனாக இருந்தேன். அவர் தனது கட்சி குறித்து படத்தில் பேசுவார் என்று எனக்கு தெரியும். அதனால் தவில்காரர் கேரக்டரில் நடிகர் கவுண்டமணிதான் நடிக்க வேண்டும். அந்த கேரக்டரில் எஸ்எஸ் சந்திரன் நடிப்பதாக இருந்தால், கரகாட்டக்காரன் படத்தில் நான் நடிக்கவில்லை. விலகிக் கொள்கிறேன் என்று உறுதியாக கூறிவிட்டேன். அதற்கு பிறகுதான் அந்த கேரக்டரில் கவுண்டமணி நடித்தார் என்று நடிகர் ராமராஜன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





