வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா போன்ற படங்களை இயக்கியவர் பொன்ராம். சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் மிகப்பெரிய வெற்றிப் பாதைக்கு பொன்ராம் படங்கள் கைகொடுத்து உதவின என்பது மாபெரும் உண்மை. ஆனால் சமீபகாலமாக படங்களை இயக்கும் வாய்ப்பின்றி காணப்படுகிறார் பொன்ராம்.
ஏனெனில் அவர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய டிஎஸ்பி படம் மிகப்பெரிய பிளாப் படமானது. இந்த படத்துக்கு பிறகு பட வாய்ப்புகளே எதுவும் பொன்ராமுக்கு அமையவில்லை. சிவகார்த்திகேயன், சூரி இருவரை அணுகிய போது, எங்களுக்கு கால்ஷீட் தர நேரமில்லை. நிறைய படங்களை ஏற்கனவே கமிட் செய்துவிட்டோம் என கை விரித்து விட்டனர்.
அதன்பிறகு, கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை அணுகிய போது அவர், அவரது தந்தை விஜயகாந்தை போலவே உதவி என கேட்பவருக்கு உதவும் மனப்பான்மையில் உடனே ஓகே சொல்லிவிட்டார். நேற்று 15ம் தேதி இந்த புதிய படத்தின் துவக்க விழா மற்றும் படபூஜை நடப்பதாக இருந்தது. ஆனால் நடக்கவில்லை.
கேப்டன் விஜயகாந்த் மறைவின் போது, ராகவா லாரன்ஸ் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் கேப்டன் மகன் சண்முக பாண்டியனின் சினிமா வளர்ச்சிக்கு உதவும் விதமாக, அவர் நடிக்கும் படத்தில் நானும் நடித்து உதவுவேன். கேப்டனுக்கு செலுத்தும் நன்றி கடனாக இதை செய்வேன் என வெளிப்படையாக கூறியிருந்தார்.
அந்த வகையில், இப்போது சண்முக பாண்டியன் நடித்துவரும் படைத்தலைவன் படத்தில், மாஸ்டர் ராகவா லாரன்ஸ் கேமியோ ரோலில் நடிப்பதாகவும், 3 நாட்கள் கால்ஷீட் தந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் ஷண்முக பாண்டியன், மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு சண்டைக்காட்சி இன்னும் படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. அதற்கான தேதியை ராகவா லாரன்ஸ் கொடுக்கவில்லை.
இதன்காரணமாக, நேற்று துவங்க வேண்டிய பொன்ராம் இயக்கும் புதிய படம் பூஜை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படைத்தலைவன் படத்தில் ராகவா லாரன்ஸ், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் சண்டை காட்சி முடிந்த பின்பே, இந்த படத்தின் பட பூஜை, துவக்கவிழா நடக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே பொன்ராம், பட வாய்ப்பின்றி பல ஆண்டுகளாக சும்மா இருந்த நிலையில், இப்போது படபூஜை தள்ளி போயிருப்பது அவரை அப்செட் செய்துள்ளது.





