மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகியிருந்தது. இதன் பிறகு சிலம்பரசன் திரைப்படம் திரையரங்குகளுக்கு வரவில்லை. அதேசமயம், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே அவர், இயக்குனர் தேசிங்கு பெரியசாமியுடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது.
இது சிலம்பரசனின் 48வது திரைப்படமாக உருவாவதாக தெரிவிக்கப்பட்டது. மிகப்பெரும் பொருட்செலவுடன் வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பிரீ ப்ரோடுக்ஷன் பணிகளிலும் தேசிங்கு பெரியசாமி ஈடுபட்டு வந்தார்.
ஆனால் திடீரென தனது தயாரிப்பு முடிவிலிருந்து பின்வாங்கியது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம். இந்த சமயத்தில் சிலம்பரசனுக்கும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைப் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் அந்த திரைப்படத்தில் சிம்புவும் கலந்து கொண்டார்.
இதனால் தேசிங்கு பெரியசாமி உடனான திரைப்படம் கேள்விக்குறியானது. இப்படியான சூழலில் தான் அந்த கதை, கலைப்புலி எஸ் தாணுவிடம் செல்ல அவர் இந்த திரைப்படத்தை எடுப்பதாக உறுதி அளித்தார். இருப்பினும் இது முதலில் சிலம்பரசனின் 48வது திரைப்படம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது ஐம்பதாவது படமாக மாறியது.
இது ஒரு பக்கம் இருக்க, ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஸ்வந்த் மாரிமுத்து உடன் சிம்பு கை கோர்த்தார். இது சிலம்பரசனின் 48வது திரைப்படமாக உருவாகிறது. தற்போது அஸ்வந்த் மாரிமுத்து, பிரதீப் ரங்க நாதனை வைத்து டிராகன் திரைப்படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்.
இது வரும் 21 ஆம் தேதி வெளியாகும் நிலையில், அதன் பிறகு சிம்பு உடனான பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிம்புவின் 49வது திரைப்படம் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் தான் இதனை எடுக்கிறார். இதில் கையில் புத்தகத்துடன் கத்தியும் வைத்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இன்ஜினியரிங் ஸ்டுடென்ட் ஆகவும் அதேசமயம் கேங்ஸ்டர் ஆகவும் சிம்பு இதில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





