அள்ள அள்ள குறையாத புதையல் மாதிரி, தமிழ் சினிமாவுக்குள் ஏகப்பட்ட விவகாரங்கள் புதைந்து கிடக்கின்றன. இதில் பல வெளிச்சத்துக்கு வந்தவையாக, ரசிகர்களுக்கு தெரிந்தவையாக இருக்கின்றன. பல தகவல்கள். திரைமறைவு காட்சிகளாக நடந்து முடிந்து விடுகின்றன. இதில் நடிகர்களை காட்டிலும், சினிமா துறை சார்ந்த பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள், புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் பேசி தயாரிப்பாளர்களிடம், பல கோடி ரூபாய்களை வாங்கிக் கொள்கின்றனர். ஆனால் அதன்பிறகு ஏதோ சில காரணங்களால் அந்த படங்களில் நடிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆனால், தயாரிப்பாளரிடம் வாங்கிய முன்பணத்தை மட்டும் திருப்பி தருவதே இல்லை. இதை பல நடிகர்கள் ஒரு கொள்கையாகவே வைத்திருக்கின்றனர்.
சில நடிகர்கள், தயாரிப்பாளர்களை வரவேற்று, உபசரித்து அட்வான்ஸ் பெறுவதோடு சரி. அதன்பிறகு அட்வான்ஸை திருப்பி கேட்கச் செல்லும் தயாரிப்பாளர்கள், நடிகரின் வீடு, அலுவலகத்துக்குள் செல்வதே பெரும்பாடாகி விடுகிறது. வாசலோடு வாட்ச்மேனை மட்டும் சந்தித்துவிட்டு திரும்பும் நிலையே தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும். போனில் தொடர்பு கொண்டாலும் நடிகரை மட்டுமல்ல, நடிகரின் மேலாளரை கூட தொடர்பு கொள்ள முடியாது.
இப்படி பலகட்ட சோதனைகளுக்கு பிறகுதான், நொந்துபோன சில தயாரிப்பாளர்கள் நேராக கோர்ட்டுக்கும், தயாரிப்பாளர் கவுன்சிலுக்கும் சென்று புகார் கொடுக்கின்றனர். அப்படித்தான், சிம்புவுக்கும் வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கும் ஏற்பட்ட பண பிரச்னையில், சிம்பு மீது வழக்கு தொடர்ந்தார் வேல்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
அதே வேளையில், இந்த விவகாரம் நடப்பதற்கு முன்பே இதே வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடத்தி வரும் வேல்ஸ் பல்கலை கழகம் மூலம், நடிகர் சிம்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. தனது தந்தை ஐசரி வேல் நினைவாக, கல்வி நிலையத்தை துவங்கிய ஐசரி கணேஷ், இன்று பல்கலை கழகமாக அதை உயர்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை, வேல்ஸ் பல்கலை கழகம் சிம்புவுக்கு வழங்கிய அந்த கவுரவ டாக்டர் பட்டத்தை திரும்ப ஐசரி கணேஷ் கேட்பாரே என்று சிலர் கேள்வி எழுப்பிய நிலையில், மருத்துவம் பார்க்க முடியாத அந்த கவுரவ டாக்டர் பட்டத்தை திரும்ப வாங்கி, ஐசரி கணேஷ் என்ன செய்யப் போகிறார், சிம்புவிடம் கொடுத்த பணத்தை, திரும்ப தரச் சொல்லுங்கப்பா என கிண்டலடிக்கின்றன கோலிவுட் வட்டாரங்கள்.





