இன்று நேற்று நாளை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் ரவிக்குமார். தனது முதல் திரைப்படத்திலேயே தமிழ் திரையுலகம் அதுவரை பார்த்திராத டைம் ட்ராவெல் கான்செப்ட்டை கையில் எடுத்து அதனை திறம்பட செய்து முடித்தார் ரவிக்குமார். இயக்குனரின் இந்த உழைப்பு அவரை சிவகார்த்திகேயனுடன் இணைத்தது.
அயலான் என இதற்கு பெயரிடப்பட, 2018ஆம் ஆண்டிலேயே விறுவிறுப்பாக அனைத்து பணிகளும் நடைபெற்றன. இதில் ரகுல் ப்ரீத்தி சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்தனர். ஷூட்டிங் விரைவாக நடைபெற்று முடிந்தாலும் சிஜி பணிகளாலும், பொருளாதார நெருக்கடியாலும் இந்த படம் முடங்கி போனது. இந்நிலையில் தற்போது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, அயலானின் சிஜி பணிகள் வேகமெடுக்க, பொங்கலன்று திரைப்படம் ரிலீசாவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் இன்று டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில், ஏலியன் வரும் காட்சிகளும், அது அடிக்கும் லூட்டிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. இதற்கான நிகழ்ச்சி சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற அதில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் பேசியதாவது,
வி எப் எக்ஸ் பணிகளுக்காக படத்தின் ரிலீஸ் தேதியை, தீபாவளியில் இருந்து பொங்கலுக்கு தள்ளி வைத்துள்ளோம். புதிய உலகை காட்ட வேண்டும் என்பதற்காக, பேண்டம் வி எப் எக்ஸ் வேலைகளை தரமாக செய்ய வேண்டி உள்ளது. அதுமட்டுமில்லாமல் தீபாவளியை விட பொங்கலுக்கு நீண்ட நாட்கள் விடுமுறை இருக்கும். அதனால் திரையரங்குகளில் குடும்பத்தினர் கொண்டாடுவதற்கு சரியானதாக இருக்கும்.
தற்போது 60 முதல் 70 சதவீதம் வரையிலான வி எஃப் எக்ஸ் பணிகள் முடிந்துள்ளன. இன்று நேற்று நாளை திரைப்படம் பார்த்ததும், அந்தப் படத்தின் இயக்குனர் ரவிக்குமாருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். அந்த அளவுக்கு ஹாலிவுட் தரத்தில் அவரது உழைப்பு இருந்தது. வெறும் ஐந்து நிமிடத்தில் படத்திற்கான அவுட் லைனை ரவிக்குமார் என்னிடம் கூறினார். உடனடியாக நான் ஒப்புக் கொண்டு விட்டேன்.
வெறும் 95 நாட்களில் நாங்கள் படத்திற்கான சூட்டிங் முடித்து விட்டோம். ஏ ஆர் ரகுமான் அயலானை பார்த்துவிட்டு சூப்பராக இருப்பதாக கூறினார். நான்கு மாதங்களுக்கு முன்பு அவர் எனக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சில வருடங்களுக்கு முன்பு அமைத்த பாடல்களுக்கு பதில், மூன்று புதிய பாடல்களை இசையமைத்து தருவதாக கூறினார். இதற்காக அவர் ஆரம்பத்தில் பேசிய சம்பளத்தை மட்டுமே இப்போது வரை வாங்கி இருக்கிறார்.
படத்திற்கு அதிகமாக நிதி தேவைப்பட்டதால், சம்பளம் இல்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்தேன். ரவிக்குமாரிடம் வேறொரு திரைப்படத்தை இயக்கலாம் அதன்பிறகு மீண்டும் இந்த படத்தை பண்ணலாம் என்று கூறினேன். ஆனால் அவர், அயலான் திரைப்படத்திலேயே கவனத்தை செலுத்தலாம் என்று கூறினார். நாங்கள் ஒருவேளை வேறொரு படத்திற்கு சென்றிருந்தால், இந்தப் படத்தில் அதற்கான தாக்கம் இருந்திருக்கும் இவ்வாறு அவர் பேசினார்.





