தமிழ் சினிமா நடிகர்கள் தங்களது இல்ல விசேஷங்களை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதுவும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இல்ல விசேஷம் என்பது களைகட்டும், விருந்தும் பலவிதங்களில் இருக்கும். குறிப்பாக, நிறைய பிரபலங்களை இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் காண முடியும்.
சமீபத்தில், சென்னையில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவின் மகள், முதல்நாள் பிறந்த நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடந்திருக்கிறது. ஏகப்பட்ட பேரை வரவழைத்து, தடபுடல் விருந்துடன் அசத்தி இருக்கிறார் யோகிபாபு. இந்த நிகழ்ச்சியில் சாப்பிட்டவர்கள், பல மாதங்களுக்கு அந்த விருந்தை மறக்க முடியாத அளவுக்கு, செமையான சைவ, அசைவ விருந்து பரிமாறப்பட்டு இருக்கிறது.
அதுமட்டுமின்றி தமிழ் சினிமா சார்ந்த ஏராளமான பிரபல நட்சத்திரங்கள் அந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து இருக்கின்றனர். குறிப்பாக சூர்யா, விஷால் உள்ளிட்ட பெரிய பெரிய நடிகர்கள் அந்த விழாவுக்கு வந்து, யோகிபாபுவின் ஒரு வயது குழந்தையை வாழ்த்தி, பரிசுகளை வழங்கிச் சென்றிருக்கின்றனர்.
ஒரு வயது குழந்தையின் பிறந்த நாளை யோகிபாபு இவ்வளவு சிறப்பாக, பெரிய அளவில் கொண்டாட காரணம், யோகிபாபு திருமணம் செய்த போது, கொரோனா காலகட்டமாக இருந்தது. அப்போது யாரையும் அழைக்காமல் அவர் திருமணம் செய்துக்கொண்டார். அதனால், இந்த பிறந்த நாள் விழாவை, கல்யாண விழாவை போல ஏற்பாடுகளை செய்து அசத்தி இருக்கிறார்.
ஆனால் இவ்வளவு பிரமாதமாக ஏற்பாடுகளை செய்தும், யோகிபாபுவுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், தமிழ் சினிமாவில் அவரது நெருங்கிய நண்பர்களில் மிக முக்கியமானவரான சிவகார்த்திகேயன் அந்நிகழ்ச்சிக்கு வரவில்லை. பல படங்களில் தன்னுடன் நடித்த அவர் வராதது, யோகிபாபுவுக்கு பெரிய பாதிப்பாக இருந்துள்ளது.
ஆனால், விழா நடக்கும் நாளில் கடைசி நேரம் வரை அங்கு வரும் முடிவில்தான் சிவகார்த்திகேயன் இருந்திருக்கிறார். ஆனால், அங்கு மக்களின் பெருங்கூட்டமும், குறிப்பாக பத்திரிகையாளர்களும் அதிகளவில் இருந்ததால், வந்தால் நிச்சயம், இமான் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என்பதால், அந்த சங்கடத்தை தவிர்க்கவே, இந்த விழாவை தவிர்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.





