நகமும் சதையும் போல நடிகர் வடிவேலுவும் சர்ச்சையும் எப்போதும் பின்னிப் பிணைந்தே வெளிச்சத்துக்கு வருகிறது. திரையில் தனது கோணங்கித்தனமான சேட்டைகளால் உடல்மொழியால் வசனங்களால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைகைப் புயல் வடிவேலு, நிஜத்தில் சினிமாவில் பல விவகாரங்களை செய்து பலருக்கும் பிரச்னைகளை சிக்கல்களை உண்டுபண்ணி விடுவது வழக்கமாகி விட்டது.
எல்லாம் அவன் செயல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து நடிகராக அறிமுகமானவர் ஆர்கே. அதன்பிறகு வைகை எக்ஸ்பிரஸ் என்வழி தனி வழி புலி வேஷம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் ஆர்கே வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டினார்.
இப்போது புதிய ஸ்டுடியோ ஒன்றை அவர் கட்டியிருக்கிறார். தனது அடுத்த படம் குறித்து நடிகர் ஆர்கே கூறியதாவது, விலங்குகளை மையப்படுத்தி ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணி பின்னணியை அடிப்படையாகக் கொண்டு இந்த கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஆணவக் கொலை விலங்குகளை கூட விட்டு வைக்கவில்லை. பணக்கார வீட்டில் ஒரு நாய் வளர்க்கப்பட்டால் அந்த நாயின் ஆணவக் கொலை எப்படி இருக்கும், அதுதான் இந்த படத்தின் கதை. மனித மனங்கள் எப்படி இருக்கின்றன என்பதை பற்றி இந்த படத்தில் பேசியிருக்கிறோம்.
இந்த படத்தில் யோகி பாபு தம்பி ராமையா நாசர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கின்றனர். படத்தை டைரக்டர் ஆர் கண்ணன் டைரக்ட் செய்கிறார். படத்துக்கு இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் நிலையில் இருக்கிறது. விரைவில் இந்த படம் திரைக்கு வரும்.
நடிகர் வடிவேலுவை என் படத்தில் நடிக்க வைப்பதற்காக அவரிடம் கதை சொன்னேன். ஆனால் அவர் நடித்தால் ஜீரோவாக தான் நடிப்பேன் என்ற முடிவில் அப்போது இருந்தார். அவர் இறங்கி வந்தால் சத்தியமாக இருவரும் மீண்டும் இணைந்து நடிப்போம். அவரிடம் இந்த படத்திற்காக நான் கொடுத்த ஒரு கோடி ரூபாய் இன்னும் அவரிடம் தான் இருக்கிறது. அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதால் இப்போது தம்பி ராமையா நடித்திருக்கிறார். தம்பி ராமையா நடித்திருப்பது வடிவேலுக்காக எழுதப்பட்ட கேரக்டரில்தான் என்று நடிகர் ஆர்கே கூறி இருக்கிறார்.





