கடந்த 5 ஆண்டுகளாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கலைப்புலி தாணு தயாரிப்பில் வாடிவாசல் படம் உருவாகும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருந்த நிலையில் இப்போது வாடிவாசல் என்ற படம் உருவாகப் போவதில்லை என்பது உறுதியாகி விட்டது. வாடிவாசல் படம் வேண்டாம் என்று சூர்யா, வெற்றிமாறன் இருவருமே உறுதியாக இந்த முடிவை எடுத்துவிட்டதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெற்றிமாறன். ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வருபவர் நடிகர் சூர்யா. இந்த சூழலில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்கி பெரிய வரவேற்பு கிடைக்குமா என்ற சிக்கல் நிறைந்த குழப்பம் வெற்றிமாறனுக்கு பல நாட்களாகவே இருந்து வருகிறது.
வாடிவாசல் படத்தில் நடிக்க நடிகர் சூர்யா கமிட் ஆன போது அவரது சம்பளம் ரூ 30 கோடி ரூபாய். இப்போது அவரது சம்பளம் ரூ. 65 கோடியாக உள்ளது. அதனால் வாடிவாசல் படத்தை ஒரு பாகமாக மட்டுமே எடுக்க வேண்டும் என்று சூர்யா கட் அண்ட் ரைட் ஆக வெற்றிமாறனிடம் கூறியிருக்கிறார். மேலும் 2 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிமாறன் படத்தில் மட்டுமே நடிக்க சூர்யா விரும்பவில்லை.
சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறனும் நடிகர் சூர்யாவும் நேரில் சந்தித்து வாடிவாசல் படம் குறித்து விளக்கமாகவும் தெளிவாகவும் கலந்து பேசியிருக்கின்றனர். இதில் சில முக்கிய கேள்விகளை எழுப்பிய நடிகர் சூர்யாவுக்கு சரியான பதில்களை சொல்லாமல் இயக்குனர் வெற்றிமாறன் மழுப்பி இருக்கிறார். குறிப்பாக படப்பிடிப்பு துவக்கம், முடிவு குறித்து கால அவகாசத்தை வெற்றிமாறன் உறுதிப்படுத்தவில்லை.
வெற்றிமாறன் ஏற்கனவே விடுதலை 2 படத்தை இயக்க 2 ஆண்டுகள் வரை கால அவகாசம் எடுத்துக்கொண்டவர். அதனால் வாடிவாசல் படத்தை 2 அல்லது 3 பாகங்களாக அவர் உருவாக்கினால் அந்த படத்தின் கெட்டப்பில் நாம் வேறு படங்களில் நடிக்க முடியாது. ஒரே படத்துக்காக அதுவும் ரூ. 30 கோடி சம்பளத்தில் அவ்வளவு நாட்களை வீணாக்க கூடாது என்பதில் சூர்யா கவனமாக இருக்கிறார்.
இந்த சூழலில் சூர்யா வெற்றிமாறன் இருவருமே ஆலோசித்து வாடிவாசல் படம் வேண்டாம் என்ற முக்கிய முடிவுக்கு வந்துவிட்டனர். அதனால் வாடிவாசல் படம் டிராப் செய்யப்படுகிறது. இந்த தகவல் வெளியான நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் வாடிவாசல் கதையில் சூர்யா தவிர வேறு யாரும் நடிக்கவும் வாய்ப்பில்லை. வெற்றிமாறனும் அதை விரும்ப மாட்டார் என்றும் கூறப்படுகிறது.





