தமிழ் சினிமாவில் இளையராஜா என்றாலே முதலில் அவரது இசையும் பாடல்களும் அவரது முகமும்தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் சமீபகாலமாக இளையராஜா என்ற பெயரை சொன்னாலே பாடல்களுக்கு காப்பிரைட் கோர்ட் வழக்கு போன்றவைதான் பலருக்கும் நினைவுக்கு வருகிறது. அந்தளவுக்கு ரசிகர்களுக்கு அடிக்கடி இளையராஜா குறித்த கோர்ட் வழக்கு விவகாரங்கள் பெரியதாக மனதில் ஊடுருவி விட்டன.
சமீபத்தில் நடிகை வனிதா விஜயகுமார், தனது இயக்கத்தில் உருவான மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் ராத்திரி சிவராத்திரி தூக்கம் போச்சு என்ற இளையராஜா இசையில் உருவான பாடலை பயன்படுத்தியதற்காக, இசைஞானி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனது பாடலை வனிதா விஜயகுமார் தனது அனுமதி பெறாமல் அவரது படத்தில் பயன்படுத்தியதாக புகார் எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடி தரும் விதமாக, இளையராஜா வீட்டுக்கு மருமகளா போயிருக்க வேண்டிய நான், இளையராஜா எனக்கு தெய்வம் போன்றவர். தெய்வமே என் மீது கோபப்பட்டால் என்ன செய்வது, இளையராஜாவுக்கு வேற வேலையே இல்லையா, அவர் கேட்கும் அளவுக்கு நான் சம்பாதிக்கவில்லை என்றெல்லாம் பேசி வனிதா விஜயகுமார் பரபரப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல சோனி மியூசிக் நிறுவனம் தங்களுக்கு உரிமை வழங்கப்பட்ட 228 ஆல்பம் பாடல்களை 3ம் நபர்களுக்கு இசைஞானி இளையராஜா பயன்படுத்த அனுமதி வழங்கி இருப்பதாக கூறி, சோனி நிறுவனம் இளையராஜா நிறுவனத்தின் மீது மும்பை ஐ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இளையராஜாவின் நிறுவனம் அவ்வாறு செய்யாமல் இருக்கும் வகையில், தடை விதிக்கவும் இடைக்கால நிவாரணம் கோரியும் சோனி நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டில் தொடர்ந்த இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் சோனி நிறுவனத்தின் வழக்கை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று இளையராஜா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மற்றும் நீதிபதிகள் கே வினோத் சந்திரன் மற்றும் பி என் அஞ்சார்யா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். காப்புரிமை தொடர்பாக சோனி நிறுவனத்தின் வழக்கை மும்பை ஐகோர்ட்டில் இருந்து சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற கோரிய இளையராஜாவின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.





