நடிகர் சூர்யா இப்போது ரெட்ரோ படத்தை முடித்துவிட்டு தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் பேட்டைக்காரன் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தில் சூர்யா வக்கீல் கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்து வருகிறார்.
கோவையில் கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் துவக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாய பல்கலை கழக வளாகத்தில் கோவில் ஷெட் போடப்பட்டு அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்போது ஒரு மாதமாக சென்னையில் ஷூட்டிங் நடந்து வருகிறது. இங்கு கோர்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
சூர்யாவுடன் இந்த படத்தில் மீண்டும் திரிஷா ஜோடி சேர்ந்திருக்கிறார். ஏற்கனவே மௌனம் பேசியதே ஆறு ஆகிய படங்களில் சூர்யா ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் நட்டி யோகிபாபு ஷிவதா சுவாசிகா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜியும் வக்கீல் கேரக்டரில் நடிப்பதாக தெரிய வந்துள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 45வது படத்தை ட்ரீம் வாரியார் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் மீண்டும் வில்லனாக நடிகர் மன்சூர் அலிகான் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எதற்கும் துணிந்தவன் ஜெய்பீம் படங்களில் சூர்யா வக்கீலாக நடித்த நிலையில், 3வது முறையாக இந்த படத்தில் அவர் வக்கீல் கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் வெளிச்சை என்ற பகுதியில் சூர்யா 45 படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டு, படப்பிடிப்பு குழுவினர் தயார் நிலையில் இருந்துள்ளனர். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீரென அதிகாரிகள் குழு ஒன்று வந்துள்ளது.
படப்பிடிப்பு கருவிகளுடன் காத்திருந்த படக்குழுவினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி ஆய்வு செய்ததில், அந்த பகுதியில் ஷூட்டிங் நடத்த முறையான அனுமதி பெறவில்லை என்பது உறுதியானது. உடனடியாக அங்கு ஷூட்டிங் நடத்த தடை விதித்த அதிகாரிகள் குழு, படப்பிடிப்பு கருவிகளுடன் அங்கிருந்த படக்குழுவினரை திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் உரிய அனுமதி பெற்ற பிறகே இங்கு ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.





