சூர்யாவிற்கு கடைசியாக 2022 ஆம் ஆண்டு திரையரங்கில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகளை கடந்தும் இப்போது வரை ஒரு திரைப்படம் கூட அவருக்கு வெளியாகவில்லை. பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வந்த அவர், இயக்குனர் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் அதிலிருந்து விலகினார்.
இதிலேயே சில குறிப்பிட்ட காலம் செல்ல, அடுத்ததாக அவர் சிறுத்தை சிவா திரைப்படத்தை தேர்ந்தெடுத்தார். இதற்கான சூட்டிங் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாகவே நடந்திருக்கிறது. கங்குவா என இந்த திரைப்படத்திற்கு பெயரும் வைக்கப்பட்டுள்ளது. முன் ஜென்ம கதையை மையமாக வைத்து பிரம்மாண்ட முறையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிகிறது.
இதற்கான டீசரும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த சூழலில், சூர்யா அடுத்ததாக வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென சுதா கொங்கரா உடன் மீண்டும் பயணிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் சூரரைப் போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனால், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்க அதன் டைட்டிலும் அறிவிக்கப்பட்டது. புறநானூறு என பெயர் வைக்கப்பட்ட நிலையில், இதில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம், விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டமே படத்தின் மையப்புள்ளி என்று கூறப்பட்டது.
ஆனால் படத்தின் அறிவிப்போடு சரி அதன் பிறகு இது வளரவே இல்லை. என்ன பிரச்சனை என்று முழுமையாக தெரியாத சூழலில், திடீரென கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்தார். இது அவருக்கு 44-வது திரைப்படமாக உருவாகிறது. விஜய்க்கு வைத்திருந்த கதையைத்தான் சூர்யாவை வைத்து கார்த்திக் சுப்புராஜ் எடுப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், love laughter war எனக் குறிப்பிடப்பட்டிருந்தது பலரும் கவனிக்கும் வகையில் அமைந்தது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். தற்போது படத்திற்கான சூட்டிங் வேலைகளில் கார்த்திக் சுப்புராஜ் மும்முரம் காட்டி வருகிறார். ஜூன் இரண்டாம் தேதி இதற்கான சூட்டிங் அந்தமானில் தொடங்குகிறதாம். பிறகு ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளார்களாம். இதன் சூட்டிங் விரைவாக முடிவடையும் நிலையில், அடுத்ததாக சூர்யா வெற்றிமாறனுடன் இணைந்து வாடி வாசலில் பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





