கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தமன்னா. முதல் படத்திலேயே நெகட்டிவ் ரோலில் நடித்து தனது திறமையை நிரூபித்திருந்தார். இருந்தாலும் அவரிடம் நடிப்பு குறை இருக்கிறது என்றே பலரும் சொன்னார்கள். அதன் பிறகு அவர் நடித்த வியாபாரி படத்திலும் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. சூழல் இப்படி இருக்க பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கல்லூரி படத்தில் நடித்தார். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
பெயரை பெற்றுத் தந்தது மட்டுமின்றி வரிசையாக வாய்ப்புகளையும் பெற்று தந்தது. இதனையடுத்து கோலிவுட்டில் தமன்னா அலை அடித்தது. எப்படி என்றால் தமன்னா நடிக்காததால் கோ படத்திலிருந்து சிம்பு விலகினார் என்று தகவல் பரவும் அளவுக்கு அந்த அலை அடித்தது. விஜய், அஜித், கார்த்தி, சூர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் ஒரு கலக்கு கலக்கினார்.
இப்படி முன்னணி நடிகையாக வந்துகொண்டிருந்தபோது தீடிரென வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இருந்தாலும் அசராத தமன்னா ஹிந்தியில் நுழைந்தார். அங்கு பிளான் ஏ பிளான் பி, ஹும்மத்வாலா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இதனால் மும்பையிலேயே செட்டிலும் ஆகிவிட்டார். சமீபத்தில்கூட அவரது நடிப்பில் ஜீ கர்தா என்ற வெப் சீரிஸும், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்ற ஆந்தாலஜியும் ரிலீஸானது.
ஹிந்திக்கு சென்றதிலிருந்து தமன்னா தனது கவர்ச்சியை அதிகப்படுத்தியிருக்கிறார் என்ற பேச்சு கடந்த சில மாதங்களாக அதிகம் கேட்கிறது. அதேசமயம் வேண்டுமென்று அப்படி பண்ணவில்லை கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடிக்கிறேன் என அவர் விளக்கமளித்திருந்தார். மேலும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது விஜய் வர்மாவுடன் காதல் ஏற்பட்டது. அதை சமீபத்தில் உறுதியும் செய்திருக்கிறார்.
இதற்கிடையே சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடித்திருந்தார் தமன்னா. 2019ஆம் ஆண்டு வெளியான அப்படம் மெகா ஹிட் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும், ராம் சரணின் மனைவியுமான உபாசனா தமன்னாவுக்கு வைரம் பரிசளித்ததாகவும், அந்த வைரத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய்; அதுதான் உலகத்திலேயே ஐந்தாவது பெரிய வைரம் என தகவல் சில நாட்களுக்கு முன்னர் தீயாக பரவியது.
இந்நிலையில் இதுகுறித்து புகைப்படத்தை பகிர்ந்து விளக்கமளித்திருக்கும் தமன்னா, “என்னது இது உலகின் 5ஆவது பெரிய வைரமா?..இது வைரமெ இல்லை. வைர டிசைனில் இருக்கும் பாட்டில் ஓப்பனர்.சும்மா போட்டோஷூட் நடத்தி போஸ் மட்டும்தான் கொடுத்தேன்” என கூறி சிரிக்கும் எமோஜியை பதிவிட்டிருக்கிறார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.





