நாயகன் படத்துக்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி தக்லைஃப் படம் மூலம் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் திரிஷா சிம்பு அபிராமி அசோக் செல்வன் ஜோ ஜோ உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது.
தக்லைஃப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் ஆகிய 3 தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். முதன்முறையாக இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனும் சிம்புவும் இணைந்து நடித்துள்ளனர். தக்லைஃப் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் தக்லைஃப் படத்தில் இருந்து ஜிங்குச்சா என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன் திரிஷா சிலம்பரசன் அசோக் செல்வன் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, மணிரத்னத்துடன் இணைந்து படத்தில் நடிப்பதற்கு மக்களின் தீர்ப்பே முக்கிய காரணம். மணிரத்னத்துக்கு அஞ்சரை மணிரத்னம் என்ற பட்டப்பெயர் வைத்துள்ளேன். அதற்கு காரணம் படப்பிடிப்புக்கு காலை 5:00 மணிக்கு வந்துவிடுவார்.
சிம்புவின் அப்பாவிற்கு என் மேல் பாசம் அதிகம். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் அழுது விடுவார். அது ஒரு தலைமுறை. இன்றைய தலைமுறையான சிம்பு எப்படி என்றால் பாசத்தில் டிஆர் 8 அடி என்றால் இவர் 16 அடி பாய்ந்து உள்ளார். இந்த டயலாக் படத்தில் வருகிறது அவரைப் பார்த்து நான் சொல்கிற மாதிரி வருகிறது. பொறாமையும் போட்டியும் நிறைந்த திரைத்துறையில் இப்படி எல்லாம் நட்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்.
இந்த படத்துல இருக்கிற இந்த ரெண்டு கதாநாயகிகளும் இந்த படத்துல ஒரு தடவை கூட என்னை பார்த்து ஐ லவ் யூ சொல்லலே. ஆனா தினந்தோறும் காலை மாலை எப்போது சூட்டிங் வந்தாலும் என்னை பார்த்து சார் ஐ லவ் யூ என்று சொன்ன ஒரே ஆள் ஜோ ஜோ தான். அதனால் மனசை கொஞ்சம் தேற்றிக்கொண்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் விழாவில் பேசியிருக்கிறார்.





