தமிழ் சினிமாவில், துணை நடிகராக நடிக்க துவங்கி பின் கதாநாயகன்களாக மாறிய பல நடிகர்கள் இருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அபூர்வ ராகங்கள் படத்தில், ஒரு சின்ன கேரக்டரில்தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவுக்குள் நடன கலைஞராக வந்து, உலக நாயகனாக வளர்ந்தவர்தான் கமல்ஹாசன்.
இப்படி பலரும் எல்லோருமே, ஹீரோவாக தங்களது சினிமா பயணத்தை துவங்கியவர்கள் இல்லை. எப்படியாவது சினிமாவுக்குள் வந்து பின் நேரம், அதிர்ஷ்டம், வாய்ப்பு அமைந்தால், அடுத்தடுத்த நிலைகளில் முன்னேறி பெரிய ஹீரோவாகி விடுவர். அப்படி தமிழ் சினிமாவில் சாதித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர்..
அப்படி காதல், தீபாவளி போன்ற படங்களில் சில காட்சிகளில் தோன்றியவர்தான் துணை நடிகர் சூரி. அதன்பின், வெண்ணிலா கபடிக்குழு படத்தின் பரோட்டா சாப்பிடும் போட்டியில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் சூரி. அதன்பின், பல படங்களில் காமெடி நடிகராக தனி முத்திரை பதித்தார்.
குறிப்பாக சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் போன்றவர்களுடன் இவரது காம்பினேஷன் மிக சிறப்பாக அமைந்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வேலையின்னு வந்துட்டா வேலைக்காரன், குள்ளநரிக்கூட்டம் போன்ற படங்களில் ஹீரோவுக்கு இணையாக காமெடி செய்து, ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டார் சூரி.
அதைத்தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விடுதலை படத்தில் மிகச்சிறந்த ஒரு பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் போலீஸ் ஜீப் ஓட்டுபவராக நடித்திருந்தார். பல காட்சிகளில், நேர்மைக்கு கட்டுப்பட்ட ஒரு கான்ஸ்டபிளாக பல துன்பங்களை சந்திக்கும் சூரி, ஒரு கட்டத்தில் தீவிரவாதி வாத்தியாரை பிடித்து கொடுப்பதுடன் முதல் பாகம் முடிவடைந்துள்ளது.
விடுதலை 2 பாகத்தை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருக்கும் நிலையில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி தற்போது நடித்துவரும் படம்தான் கருடன். இந்த படம், ரூ. 40 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதில் சசிக்குமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, தேனி பகுதிகளில் நடந்து வருகிறது. சமீபத்தில் அந்த படப்பிடிப்பு காட்சியின் போதுதான் வேடிக்கை பார்த்த சிறுவர், சிறுமிகளை கேரவனுக்குள் சூரி அழைத்துச் சென்று காட்டியது வைரலானது குறிப்பிடத்தக்கது.





