நடிகர் விஜய் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஜேசன் சஞ்சய். இவரது தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் கடந்த 1980களில் ஏராளமான படங்களை இயக்கியவர். பல படங்களை சொந்தமாகவும் தயாரித்தவர். இவருக்கு புரட்சி இயக்குனர் என்ற ஒரு பெயரும் அன்று ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக விஜய் உருவானதில் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. குறிப்பிட்ட காலம் வரை விஜய் நடித்த படங்களின் கதைகளை கேட்டு நல்ல கேரக்டர் கொண்ட படங்களை தேர்வு செய்தவர் எஸ்ஏசிதான். மேலும் நாளைய தீர்ப்பு ரசிகன் செந்தூரபாண்டி உள்ளிட்ட விஜய் நடித்த சில படங்களை அவரே டைரக்ட் செய்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய், சிறு வயதில் இருந்தே சினிமாவில் இயக்குனராகும் ஆசையில் இருந்தார். சில குறும்படங்களை அவர் இயக்கி வெளியிட்டார். மேலும் வெளிநாட்டில் திரைப்படக்கலை சார்ந்த பயிற்சிகளையும் அவர் பெற்றுள்ளார். அப்பாவை போல நடிகர் ஆகாமல் இயக்குனராகவே அதிக விருப்பம் என்றும் கூறினார்.
இதையடுத்து லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் நடிகை ஃபரியா அப்துல்லா நடிப்பில் சிக்மா படம் கடந்த 2ம் தேதி வெளியானது. முன்னாள் நடிகர் இன்றைய முதல்வர் விஜயின் மகன் இயக்கிய படம் என்ற அடையாளத்துடன்தான் இந்த படம் திரைக்கு வந்தது. ஆனால் படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே உண்மை.
படத்தின் மேக்கிங் சண்டை காட்சிகள் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தாலும் ஒரு இயக்குனராக இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஜேசன் சஞ்சய் தரவில்லை என்று விமர்சனம் எழுந்தது. தொழில்நுட்பத்தில் ஒரு படம் சிறப்பாக இருப்பதை காட்டிலும் கதையம்சத்தில் திரைக்களத்தில் ஒரு இயக்குனர் தனது தனி முத்திரையை பதிக்க வேண்டும் என்ற நிலையில் அதில் ஜேசன் சஞ்சய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்துவிட்டார்.
அதனால் சிக்மா படத்துக்கு போதிய வரவேற்பும் ஆதரவும் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிக்மா படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் இதுவரை ரூ. 10 கோடி வரை மட்டுமே படம் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த படம் ரூ. 25 கோடி பட்ஜெட்டில் தயாரான நிலையில் லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு பலத்த நஷ்டத்தை தந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.





