பொறியாளன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பரிச்சயமானார். தொடர்ந்து அவர் பியார் பிரேமம் காதல் தாராள பிரபு ஓ மணப்பெண்ணே வில் அம்பு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ஆனால் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அவர் நடித்த பார்க்கிங் படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை அவருக்கு பெற்றுத் தந்தது. பார்க்கிங் பட நாயகன் ஹரீஷ் கல்யாண் என்று அடையாளமாக சொல்லும் அளவுக்கு அந்த படம் பெரிய அங்கீகாரத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பெற்றுத் தந்தது.
ஒரு காம்பவுண்ட் வீட்டுக்குள் காரை யார் நிறுத்திக்கொள்வது என்பதில் ஆரம்பிக்கும் இந்த ஈகோ விவகாரம்தான் படத்தின் மையக்கரு. இதில் நாயகனாக ஹரீஷ் கல்யாணும், வில்லன் கேரக்டரில் நடிகர் எம்எஸ் பாஸ்கரும் அந்த கேரக்டர்களில் வாழ்ந்து இருந்தனர். பார்க்கிங் படம் மிகப்பெரிய வெற்றியை இருவருக்குமே கொடுத்தது.
இதையடுத்து கடந்த ஆண்டில் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்த படம் லப்பர் பந்து. இந்த படத்தில் கெத்து தினேஷ் சுவாசிகா ஜென்சன் திவாகர் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி காளி வெங்கட் பால சரவணன் கீதா கைலாசம் தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்தாண்டில் வெளியான மாஸ் ஹிட் படங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.
தற்போது டீசல் என்ற படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்து வருகிறார். அந்த படத்தில் இருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன. அதே போல் கவின் நடித்த லிப்ட் படத்தின் இயக்குனர் வினீத் வர பிரசாத் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹரீஷ் கல்யாண் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2 வாரங்களாக நடந்து வருகிறது. ஹரீஷ் கல்யாண் பங்கேற்ற சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடக்கிறது.
ஆனால் இன்னும் இந்த படத்துக்கு கதாநாயகி கிடைக்கவில்லை. அதனால் நாயகி இல்லாத காட்சிகளாக தேர்வு செய்து ஷூட்டிங் நடத்தப்படுகிறது. சில நடிகைகளிடம் கால்ஷீட் கேட்டும் அவர்கள் பிஸியாக இருப்பதால் நடிக்க சம்மதிக்கவில்லை. இன்னும் 2 வாரங்கள் பார்த்துவிட்டு, ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க புதுமுக நடிகை தேவை என்ற அறிவிப்பை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. வெற்றிப் பட ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலமையா என ரசிகர்கள் பலரும் புலம்புகின்றனர்.





