தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த நடிகர் விஜய் இப்போது அரசியல் களத்திலும் ஒரு முக்கிய ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார். விஜயகாந்துக்கு பிறகு நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய எழுச்சி இருப்பதை வெளிப்படையாகவே காண முடிகிறது. 2026ம் ஆண்டின் முதல்வர் விஜய் என்ற கோஷம் சத்தமாக ஒலிக்க துவங்கி விட்டது.
இதற்கிடையே ஜனநாயகன் படத்தின் டீசர் நேற்றிரவு சரியாக 12 மணிக்கு வெளியானது. நடிகர் விஜயின் 51வது பிறந்த நாளான இன்று அந்த சிறப்பு நாளை கொண்டாடும் விதமாக ஜனநாயகன் படக்குழு இந்த டீசரை வெளியிட்டு நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியிருக்கிறது.
இந்த டீசரில் நடிகர் விஜய் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடந்து வருகிறார். ரத்தம் தேய்ந்த வாளில் தனது மீசையை நீவி விடுகிறார். என் நெஞ்சில் குடியிருக்கும்… என்ற அவரது வழக்கமான முதல் வார்த்தைகள் பின்னணியில் ஒலிக்கிறது. மேலும் ஒரு உண்மையான தலைவர் அதிகாரத்துக்காக எழுவதில்லை; ஆனால் மக்களுக்காக என்ற வசனம் ஆங்கிலத்தில் உள்ளது.
ஆக, ஜனநாயகன் படத்தில் நடிகர் விஜய் முழுக்க முழுக்க அரசியல்தான் பேசப் போகிறார் என்பது தெளிவாகி விட்டது. ஏனெனில் வருகிற 2026ம் ஆண்டில் மே மாதம் சட்டசபை தேர்தல் வரப் போகிறது. அதற்கு 4 மாதங்கள் முன்னதாக திரைக்கு வர உள்ள ஜனநாயகன் படத்தில் விஜய் அரசியல் வசனங்களில் அனல் பறக்க விடப் போகிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அனிருத் இசையில் பாடல்கள் பின்னணி இசை சேர்ப்பு பணிகளும் நடந்து வருகின்றன. இந்த படத்தில் கௌதம் மேனன் நரேன் பிரகாஷ் ராஜ் பாபி தியோல் பிரியாமணி பூஜா ஹெக்டே மமிதா பைஜூ உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
ஜனநாயகன் படம் வெளியாகும் நேரத்தில், திமுகவுக்கு எதிரான விஜயின் வசனங்கள் பெரிய அளவில் தமிழ்நாட்டு அரசியலில் புயலை கிளப்பும். அதே நேரத்தில் தமிழ் சினிமாவை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ரெட் ஜெயின்ட் மூவிஸ், ஏதேனும் பிரச்னை செய்தால் அதையே அரசியல் களத்தில் பெரிய பிரச்னையாக்கி தனக்கு சாதகமாக்கி கொள்ளவும் விஜய் திட்டமிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.





