தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களுடன் நடித்தவர் நடிகர் சிவக்குமார் அவரது மூத்த மகன் சூர்யா, இளைய மகன் கார்த்தி. அவர்களும் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருந்து வருகின்றனர். சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரத்தில் தேமுதிக தலைவர், நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். அப்போது வெளிநாடுகளில் இருந்த சூர்யா மற்றும் கார்த்தியால் சென்னைக்கு வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை. வீடியோ ஒன்றை பதிவிட்டு அதில் வருத்தமும், அஞ்சலியும் செலுத்தியிருந்தார் சூர்யா.
சமீபத்தில் சென்னை திரும்பிய நடிகர் கார்த்தி, தன் தந்தை சிவக்குமாருடன் விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, விஜயகாந்த் இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் பங்கேற்காதது வாழ்நாள் முழுவதும் எனக்கு ஒரு குறையாகவே இருக்கும் என, வருத்தப்பட்டு சொல்லியிருந்தார்.
நடிகர் சிவக்குமார் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்த போதுதான், விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து பிரபலமானார். அப்போது சில படங்களில் சிவக்குமார், விஜயகாந்த் இருவரும் சேர்ந்து நடித்தனர். அப்போதே அவர்களுக்குள் நட்பு இருந்த நிலையில், அது நீண்ட காலம் வரை இருந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா இருவரும் காதலித்தனர். இரண்டு தரப்பு பெற்றோர்களும் இதற்கு சம்மதித்த நிலையில், திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. அப்போது சிவக்குமார் தனது திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் திருமண பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்தார். அதேபோல், தனது நீண்டகால நண்பரும், நடிகருமான விஜயகாந்த், தனது இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்க ஆசைப்பட்டு அவருக்கும் பத்திரிகை வைக்க அவரை நேரில் சந்தித்தார்.
அப்போது நடிகர் சிவக்குமாரிடம் பேசிய விஜயகாந்த், உங்கள் மகன் சூர்யா, ஜோதிகா திருமணத்துக்கு என்னால் வர முடியாது. நீங்கள் தயவு செய்து என்னை அழைக்காதீர்கள். நீங்கள் மூத்தவர். நீங்கள் அழைத்தால் நான் கண்டிப்பாக வரவேண்டும். இப்போது நான் ஒரு நடிகன் மட்டுமல்ல. ஒரு கட்சியின் தலைவராகவும் இருக்கிறேன். அந்த திருமண விழாவில் திமுக தலைவர் கருணாநிதி, முதலமைச்சர் ஜெயலலிதா போன்றவர்கள் கலந்துக்கொள்வார்கள். அங்கு எனக்கு வந்தால் தேவையற்ற சங்கடங்கள், சர்ச்சைகள் ஏற்படும். அதனால் என்னால், திருமணத்துக்கு வர இயலாது, என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் விஜயகாந்த். இது ஒருவிதத்தில் சிவக்குமார் குடும்பத்துக்கு விஜயகாந்த் மீது அதிருப்தியை ஏற்படுத்தியதாக ஒரு நேர்காணலில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.





