தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் விஷ்ணு விஷால். குள்ளநரி கூட்டம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி தனக்கு ஏற்ற ஸ்கிரிப்டுகளை நடித்து அதை வெற்றி படமாக கொடுத்து வருகிறார். இதன் காரணமாகவே அவர், திரைத்துறையில் நிலைத்து நிற்கிறார் என்று கூறலாம்.
இதில் இயக்குனர் ராம்குமாருக்கு பெரும் பங்கு இருக்கிறது. அவரின் முதல் திரைப்படம் ஆன, முண்டாசுப்பட்டியில் விஷ்ணு விஷால்தான் ஹீரோ. மூடநம்பிக்கைக்கு எதிரான கதைக்களத்தை கையில் எடுத்து அதில் முழுக்க முழுக்க காமெடியை புகுத்தி, அட்டகாசம் செய்திருந்தார் இயக்குனர் ராம்குமார். சூப்பராக அமைந்த திரைக்கதையால், வாகை சூடியது முண்டாசுப்பட்டி.
இதனைத் தொடர்ந்து ராம்குமார் விஷ்ணு விஷால் கூட்டணியில் இரண்டாவதாக உருவான திரைப்படம்தான் ராட்சசன். தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைப்படம் எது என பட்டியலிட்டால் அதில் முதல் ஐந்து இடங்களுக்குள் ஒன்றாக வந்துவிடும் ராட்சசன். ஏன் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த திரில்லர் திரைப்படமாக நாம் ராட்சசனையே கூறலாம்.
படம் ஆரம்பித்தது முதல் ஒரு சஸ்பென்சை உருவாக்கி, அதை க்ரைம் திரில்லராக சரியான திசையில் கொண்டு சென்று, ஆடியன்ஸ்களை இருக்கையின் நுணுக்கி வரவழைத்து இருப்பார் ராம்குமார். முண்டாசுபட்டியை எடுத்தவர்தான் இந்த திரைப்படத்தை இயக்கினாரா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ராட்சசன் திரைப்படத்தின் மேக்கிங் அமைந்திருக்கும்.
விஷ்ணு விஷாலுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. இதுபோக ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கட்டா குஸ்தி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களையும் விஷ்ணு விஷால் கொடுத்திருக்கிறார். தற்போது மீண்டும் ராம்குமார் உடன் இணைந்து இரண்டு வானம் எனும் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார்.
இதுபோக அவர் நடித்திருக்கும் ஆரியன் திரைப்படமும் திரையரங்குகளுக்கு வருகிறது. அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், ராட்சசன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நானே நடிக்க விருப்பப்பட்டேன். அது குறித்து இயக்குனரிடம் கேட்டபோது, இந்த கதாபாத்திரத்திற்கு வேறு ஒருவர் ட்ரெய்ன் ஆகி வருகிறார் என்று கூறினார். இதனால் அடுத்தவர் வாய்ப்பைக் கெடுக்க நான் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.





