செம்பருத்தி படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்கே செல்வமணி. இந்த படத்தில்தான் நடிகர் பிரசாந்த் நடிகை ரோஜா அறிமுகமாகினர். இந்த படத்தை தொடர்ந்து புலன் விசாரணை கேப்டன் பிரபாகரன் ராஜமுத்திரை அதிரடிப்படை அரசியல் மக்கள் ஆட்சி என பல படங்களை இயக்கியவர்.
ஒரு கட்டத்தில் தான் அறிமுகப்படுத்திய நடிகை ரோஜாவையே இயக்குனர் ஆர்கே செல்வமணி காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். நடிகை ரோஜா, ஆந்திராவில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின்போது நடிகை ரோஜா சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி அமைப்புக்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்னைகள் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த பிரச்னைகள் முற்றிய நிலையில் இப்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் கூறும் புகார்களும் குற்றச்சாட்டுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி தயாரிப்பாளர் சங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசிடம் முறையிட்டு இருப்பதாகவும் விரைவில் இதற்கு அரசு தீர்வு காணும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சங்க பிரசனைகள் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக பிரிந்திருப்பதை பயன்படுத்தி ஆர்கே செல்வமணி லாபமடைந்து வருகிறார். தயாரிப்பாளர் சங்கம் தொடங்கிய தொழிலாளர்கள் அமைப்பை கிண்டல் கேலி செய்திருக்கிறார்.
தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களாக இருந்து, பதவி ஆசையால் புதிய சங்கம் தொடங்கியவர்களோடு சேர்ந்து கொண்டு தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராக ஆர்கே செல்வமணி செயல்பட்டு வருகிறார். இந்த பிரச்னைகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் விளக்கி கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று கமிஷனர் உத்தரவாதம் அளித்துள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





