அஜித் குமாருக்கு இந்த வருடம் மட்டுமே இரண்டு திரைப்படங்கள் வெளியாகி விட்டன. அதில் ஒன்று விடாமுயற்சி திரைப்படம். மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. பிப்ரவரி மாதம் இது ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அடுத்த இரு மாதங்களிலேயே அதாவது ஏப்ரலில் ரிலீஸ் ஆனது குட் பேட் அக்லி.
ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். திரிஷா பிரபு அர்ஜுன் தாஸ் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படமும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதேசமயம், பல தரப்பினருக்கும் இந்த திரைப்படம் பிடித்துப் போனதால் வசூலில் வெற்றி படமாக அமைந்தது.
முழுக்க முழுக்க கமர்சியல் ரீதியாக இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். எந்த ஒரு லாஜிக்கும் பார்க்காமல், அஜித் குமாரை மட்டுமே மையப்படுத்தி, அவரைப் புகழ்ந்து தள்ளும் வகையில் ஏராளமான காட்சிகளை வைத்து, ரெட்ரோ பாடல்களையும் ஒலிக்கவிட்டு அதகள படுத்தியிருந்தார்.
மிக முக்கியமாக அஜித் ரசிகர்களுக்கு இந்த காட்சிகள் அனைத்தும் பிடித்துப் போனதால், படம் வெற்றி மேல் வெற்றி குவித்தது. 300 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, திரைப்பட சூட்டிங்கிற்கு லீவு விட்டுவிட்டு, கார்பந்தயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் அஜித் குமார். துபாய் பந்தயத்தை முடித்துவிட்டு ஐரோப்பிய நாடுகளில் அவர் பயணம் செய்து வருகிறார்.
அங்கு அவர் அளித்த பேட்டியில், அடுத்த ஆறு ஆண்டுகளில் தொடர்ந்து திரைத்துறையில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்து இருந்தார். இப்படியான சூழலில் அஜித் குமார் அடுத்து எந்த இயக்குனருடன் கை கோர்க்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடனேயே கைகோர்த்தார் அஜித்குமார். இதனை ஆதிக் ரவிச்சந்திரனும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
தனது முந்தைய திரைப்படம் அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது, இந்த திரைப்படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் ஒரு எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். தற்போது இதற்கான பிரீ ப்ரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் மாதம் இதற்கான சூட்டிங் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.





