லியோ திரைப்படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் கோட். அஜித்தை வைத்து மங்காத்தா, சிம்புவை வைத்து மாநாடு என மிகப் பெரிய வெற்றியை கொடுத்த வெங்கட் பிரபு தான் இந்தப் படத்தை எடுத்து வருகிறார். பிகில் திரைப்படத்திற்கு பிறகு ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் உருவாகின்றன. இதில் விஜய் உடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். பிரபுதேவா, பிரசாந்த், லைலா, மைக் மோகன், மீனாட்சி சவுத்ரி, அஜ்மல், வைபவ், வி டிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், யோகி பாபு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் விஜய்யை இளமையாக காட்டும் பணியிலும் படக்குழு ஈடுபட்டு உள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு இரண்டு கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. ஆனால் வெங்கட் பிரபு மூன்றாவதாக விஜய் கதாபாத்திரத்தை வைத்திருப்பதாக திரைத்துறை வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. இந்தப் படத்தில் சினேகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவரான சினேகா, பிரசன்னா உடனான திருமணத்திற்கு பிறகு கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். தனக்கு பொருத்தமான ரோலில் மட்டுமே சினேகா நடித்து வரும் சூழலில், தற்போது அவர் தேர்ந்தெடுத்திருக்கும் திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தில் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.
விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்கிறாராம். இன்னும் அவருக்கான படப்பிடிப்பு பணிகள் முடியவில்லையாம். இதனால் தொடர்ந்து சூட்டிங் பணிகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். ஃபேண்டஸி திரில்லராக உருவாகும் இந்த திரைப்படத்தில், ஏராளமான ஆச்சரியங்களையும் வெங்கட் பிரபு மறைத்து வைத்திருக்கிறாராம். குறிப்பாக மறைந்த நடிகர், விஜயகாந்தை இந்த திரைப்படத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலம் காட்டுகிறார்கள்.
அவர் திரையில் தோன்றும் காட்சி மிக முக்கியமானதாக இருக்கும் என்று பலரும் தெரிவித்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு நிமிடங்கள் அந்தக் காட்சி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுபோக ஒரு பாடலுக்கு திரிஷாவும், சிறிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் நடித்திருக்கிறார்கள். செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், அதற்கான வேலைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் வெங்கட் பிரபு.





