நடிகர் கவின் நடிப்பில் ஸ்டார் என்ற படம் வரும் வெள்ளிக்கிழமை, மே 10ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏற்கனவே டாடா, லிப்ட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்த நடிகர் கவின் ஸ்டார் படம் மூலம் இன்னும் பல படிகள் மேலே போய் அனைத்து தரப்பு ரசிகர்களின் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டார் படத்தின் கதைப்படி கல்லூரி மாணவரான கவின், ஒரு சினிமா நடிகராக வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு. இந்த படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளில், கவின் நடிப்பு வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஆனால் இந்த படத்தின் முதலில் நடிக்க இருந்தது பார்க்கிங் பட நாயகன் ஹரிஷ் கல்யாண்தான். ஆனால் அந்த நேரத்தில் அவர் வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் ஸ்டார் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இப்போது ஸ்டார் படத்தை மிஸ் பண்ணியதற்காக வருத்தப்படுகிறார்.
இந்நிலையில், ஸ்டார் படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் சந்தானம் நடித்த இங்க நான்தான் கிங்கு என்ற படம் ரிலீஸ் ஆவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அந்த படம் மேலும் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மே 10ம் தேதி மேலும் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
மௌனகுரு, மகாமுனி படங்களை இயக்கியவர் சாந்தகுமார். இவர் அடுத்ததாக ரசவாதி தி அல்கெமிஸ்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். வரும் 10ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரை 30 லட்சம் பார்வையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுன்தாஸ் இந்த படத்தில், சித்த மருத்துவராக நடித்திருக்கிறார். தனது கோடை விடுமுறை செலவிடுவதற்காக மலைக் கிராமத்திற்கு வருகிறார். அதன் பிறகு அவர் வாழ்வில் சந்திக்கும் சம்பவங்களை பற்றி பேசக்கூடிய படமாக ரசவாதி படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் மே 10 தேதி இயக்குனர் மற்றும் நடிகர் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு என்ற படமும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் வழக்கமான நடிப்பில் இருந்து மாறுபட்டு, அமீர் நகைச்சுவை கேரட்டில் நடித்திருக்கிறார் என்றும் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது. ஒரே நாளில் மே 10ம் தேதி ஸ்டார், உயிர் தமிழுக்கு, ரசவாதி என 3 படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதில் எந்த படம் களத்தில் நின்று ஜெயித்து ரசிகர்கள் மனதில் முதலிடம் பிடிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.





