IIFA விருது வழங்கும் விழா, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா அபுதாபியில் உள்ள யாஷ் தீவில் நேற்று நடந்தது. இந்த விழாவில் விருதுக்கு உரிய கலைஞர்கள் அறிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், சமந்தா, ஐஸ்வர்யா ராய், மணிரத்னம், ஏ ஆர் ரகுமான், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணன், நானி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சிறந்த படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. நெல்சன் இந்த படத்தை இயக்கியிருந்தார். அனிருத் இசை அமைத்திருந்தார். சிறந்த நடிகர் விருது, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் விக்ரம் பெற்றார்.
சிறந்த வில்லன் நடிகர் எஸ் ஜே சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படத்தில் வில்லனாக நடித்தததற்காக அவர் இந்த விருதை பெற்றார். நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி, வாய் பேசாத ராணி கேரக்டரில் சிறப்பாக நடித்ததற்காக அவர் இந்த விருதை பெற்றார்.
பொன்னியின் செல்வன் படத்துக்காக சிறந்த இயக்குனர் விருதை மணிரத்னம் பெற்றார். சிறந்த துணை நடிகருக்கான விருது நடிகர் ஜெயராமுக்கு வழங்கப்பட்டது. இவர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருதை பெற்றார்.
சிறந்த துணை நடிகை விருது சாஹஸ்ரா ஸ்ரீ பெற்றார். இவர் கடந்தாண்டு அருண்குமார் இயக்கத்தில், சித்தாத் ஹீரோவாக நடித்த சித்தா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதற்காக சாஹஸ்ரா ஸ்ரீக்கு சிறந்த துணை நடிகை விருது வழங்கப்பட்டது. இந்திய சினிமாவில் சிறந்த பெண்மணி என்ற சிறப்பு விருது நடிகை சமந்தாவுக்கு வழங்கப்பட்டது. அவர் திரையுலக பயணத்தில் அவரது சிறந்த நடிப்பை பாராட்டும் விதமாக இவ்விருது வழங்கப்பட்டது.
சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பின்னணி இசை என இரண்டு பிரிவுகளில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் சிறந்த இசையை வழங்கியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதில் பொன்னியின் செல்வன் படம் 6 விருதுகளை அள்ளியுள்ளது. அதே போல் இந்தி திரையுலகிலும் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.





