தமிழ் சினிமாவில் இப்போது நிறைய படங்கள் வெளியாகின்றன. இதில் சில படங்கள், சின்ன பட்ஜெட் படங்களாகவும், பெரிய ஸ்டார் நடிகர்கள் நடிக்கும் படங்கள் அனைத்தும் மெகா பட்ஜெட் படங்களாகவும் இருக்கின்றன. 300 கோடி ரூபாய் வரை செலவு செய்து எடுக்கப்படும் படங்கள், தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகின்றன.
ஆனால் ஒரு படத்துக்கு குறிப்பிட்ட பெரிய தொகையில் பட்ஜெட் ஒதுக்கப்பட்டாலும், அதில் பெரும்பாலான தொகை ஹீரோ சம்பளம், டைரக்டர் சம்பளம், இசையமைப்பாளர் சம்பளம் என முக்கால்வாசி சம்பளம் அதற்கே போய் விடுகிறது. அதனால் பெரிய பட்ஜெட் படங்களில், மேக்கிங் செலவு என்பது மிக மிக குறைவாகவே இருக்கிறது.
இதற்கு உதாரணமாக இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் பட்ஜெட் ரூ. 70 கோடி. இதில் சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ. 30 கோடி, டைரக்டர் ஏஆர் முருகதாஸ் சம்பளம் ரூ. 20 கோடி, இசையமைப்பாளர் அனிருத் ரூ. 7 கோடி என மொத்தம் 57 கோடி ரூபாய் போக, மீதி 13 கோடி ரூபாயில்தான், அந்த படம் உருவாகிறது.
இது இப்போதைய பல நட்சத்திர நடிகர்களுக்கும் பொருந்தும். இப்படி மொத்த பட்ஜெட்டில் பெரும்பகுதியை நடிகர்களும், இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும் பங்கிட்டு கொள்வதால் படத்தின் தயாரிப்பு தரம் என்பது, ரசிகர்களை வெகுவாக அதிருப்தியடையவே செய்கிறது. அதனால் ரிலீஸ் ஆகும் பல படங்கள், ஆளை விடுங்கடா சாமி, என தெறித்து ஓடும் நிலைக்கு ரசிகர்களை தள்ளுகின்றன.
நடப்பு புத்தாண்டில் 2024 பிறந்து 2 மாதங்கள் ஆகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் 11 படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் அயலான், கேப்டன் மில்லர், மெரி கிறிஸ்துமஸ், சேப்டர் மிஷன் 1 ஆகிய 4 படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின. இதில் சேப்டர் மிஷன் 1 மட்டுமே, நல்ல படமாக இருந்தது. ஆனால், 80 தியேட்டர்களில் மட்டுமே இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. மற்ற 3 படங்களுமே பிளாப் படங்கள்தான். கேப்டன் மில்லர் வன்முறை படமாக இருந்தும் வசூலித்தது. சைரன், வடக்குப்பட்டி ராமசாமி படங்களும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் வரும் மார்ச் 1ல் வெள்ளிக்கிழமை அன்று அதோ முகம், ஜோஸ்வா, மங்கை, போர், சத்தமின்றி முத்தம் தா, தோழர் சேகுவாரா ஆகிய 6 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதில் மங்கை படமும், தோழர் சேகுவாரா படமும் ரிலீஸ் ஆகுமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. இப்போது பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், இந்த படங்கள் வெளிவருவதும் கவனிக்கத்தக்கது.





