தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா பாலு மகேந்திரா மகேந்திரன் கே பாலச்சந்தர் போன்றவர்களின் படங்களில் ஒரு படத்திலாவது ஒரு சின்ன கேரக்டரில் நடித்துவிட வேண்டும் என்று தமிழ் நடிகர் மட்டுமின்றி பிற மொழிகளைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் பலரும் நேர்காணலில் வெளிப்படையாக சொல்வார்கள்.
அந்த அளவுக்கு ஆளுமைமிக்க இயக்குனர்களாக படைப்பாளிகளாக தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் இருந்தனர். அதேபோல் இன்றைய காலகட்டத்தில் மணிரத்னம் பாலா வெற்றிமாறன் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்று பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு காரணம் இவர்கள் சிறந்த படைப்பாளிகளாக நல்ல படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து தந்து வருகின்றனர்.
குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படங்கள் எல்லாமே தரமான படங்களாக சிறந்த படைப்புகளாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அவர் இயக்கிய பொல்லாதவன் ஆடுகளம் அசுரன் விசாரணை வடசென்னை விடுதலை 1 விடுதலை 2 உள்ளிட்ட படங்கள் பெரிய வரவேற்பை பெற்றன.
இப்போது தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிப்பில் அரசன் என்ற படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார் மேலும் நடிகர் கென் கருணாஸ் நடிப்பில் ராஜன் வகையறா என்ற படத்தையும் வெற்றிமாறன் டைரக்ட் செய்து வருகிறார். வடசென்னை படத்தின் கிளை கதையாக அரசன் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் சிம்பு 3 விதமான வித்யாசமான கெட்டப்புகளில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது, இதுவரை நான் டைரக்ட் செய்த படங்கள் ரிலீஸ் ஆன பிறகு ஒருமுறை கூட என்னுடைய படங்களை பார்த்தது இல்லை. டிவியில் ஒரு பாட்டு வந்தால் கூட டகால்ன்னு அதை மாத்திடுவேன். அந்த பாட்டை எங்காவது கேட்டால் நான் திரும்பி ஓடிடுவேன்.
அந்த பாட்டை திரும்ப கேட்கறதுல என்ன பிரச்னை என்றால் ஓவர்ரூல் ஆயிடும். படத்துக்கு முன்னாடி ரிலீஸ்க்கு முன்னாடி கேட்டு கேட்டு அந்த மாதிரி ஆயிடும். படத்தை பார்த்தால் இந்த மாதிரி பண்ணியிருக்கலாமே அந்த மாதிரி பண்ணியிருக்கலாமே என்று யோசித்து ரொம்பவும் மன உளைச்சல் ஏற்பட்டு விடும். அதனால் என்னுடைய படத்தை பார்க்கறதையே அவாய்டு பண்ணிடுவேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.





