சினிமா தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் புதிய படங்கள் 4 வாரங்கள் அல்லது 8 வாரங்கள் இடைவெளிக்கு பிறகு ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. தியேட்டர்களில் அந்த படங்களை பார்க்காமல் தவற விட்டவர்கள், ஓடிடி தளங்களில் அந்த படங்களை பார்த்து மகிழ்கின்றனர். சில படங்கள் தியேட்டர்களுக்கு செல்லாமல் நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் இந்த வாரத்தில் மொத்தம் 8 படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. முன்னணி ஓடிடி நிறுவனங்களான ஹாட் ஸ்டார் அமேசான் பிரைம் ஜி5 ஆஹா சோனி லைவ் உள்ளிட்டவற்றில் இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
சமீபத்தில் குடும்ப உறவை மையப்படுத்தி வெளிவந்த படம் மாமன். நடிகர் சூரி ராஜ்கிரண் ஐஸ்வர்யா லட்சுமி ஸ்வாசிகா பால சரவணன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் நாளை 8ம் தேதி ஜி5 ஓடிடியில் வெளியாகிறது. இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் சிவா அஞ்சலி உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் பறந்து போ. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இந்த படம் கடந்த 5ம் தேதியே ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகிவிட்டது.
நடிகர் கலையரசன் பிரியாலியா நடிப்பில் உருவான டிரண்டிங் திரைப்படத்தை இயக்குனர் சிவராஜ் டைரக்ட் செய்திருந்தார். முக்கிய பிரச்சினைகளை பேசிய இந்த படம் நாளை 8ம் தேதி சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிப்பில் வெளியான திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. கடந்த மாதம் ஜூலை 11ம் தேதி தியேட்டரில் வெளியான இந்த படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தெலுங்கு ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக வெளிவந்த படம் பத்மஷலு. இரண்டு நண்பர்களால் ஒரு ஊருக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் காமெடி படமான இது இன்று 7ம் தேதி ஈ டிவி விண் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த 1980 கால கட்டத்தில் அரசியல் எப்படி இருந்தது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தெலுங்கு தொடர் மாயாசபா. இந்த மாயா சபா வெப் தொடர் இன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான படம் அரேபிய காதலி. மீனவர்களின் வாழ்க்கையை சொல்லும் கதைக்களமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கன்னட மொழியில் வெளியான திரைப்படம் ஹெப்புலி கட். இந்த படம் நாளை ஆகஸ்ட் 8ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தெலுங்கில் ரொமாண்டிக் லவ் ஸ்டோரியாக உருவான மொத்தேவரி லவ் ஸ்டோரி திரைப்படம் நாளை 8ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.





