தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். சினிமாவில் அவர் எங்கு மேடை ஏறினாலும் அந்த இடத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். பல இடங்களில் வாய்ப்பேச்சால் மாட்டி கொள்ளும் மன்சூர் அலிகான், அதற்கு உரிய விளக்கமும் கொடுக்காமல் சமாளித்து வருவார்.
சில காலம் நாம் தமிழர் கட்சியில் இருந்த அவர், பிறகு அதிலிருந்து வெளியேறி புது கட்சி ஒன்றையும் ஆரம்பித்தார். அது போக வெள்ளம் வரும்போது தனியே படகை எடுத்துக் கொண்டு செல்வது, தெருவோர நாய்களிடம் பேசுவது என எதையாவது செய்து சமூக வலைதளங்களை கவனிக்க வைப்பார் மன்சூரலிகான். இந்த நிலையில் சமீபத்தில் அவர், நடிகை திரிஷா பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
லியோ படம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தனக்கு அந்த படத்தில் எந்த ஒரு பாலியல் வன்கொடுமை காட்சியும் வைக்கப்படவில்லை என்று கூறி இருந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகை திரிஷாவையும் குறிப்பிட்டு மன்சூர் அலிகான் பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலாக, மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார் திரிஷா.
இதேபோல், நடிகைகள் குஷ்பூ மாளவிகா மோகனன், பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்டோரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர். நடிகரின் பேச்சுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்தப் பிரச்சனை நாளடைவில் வீரியமாக, மன்னிப்பு கூறினார் மன்சூர் அலிகான். இதனை த்ரிஷாவும் ஏற்றுக் கொண்டார்.
ஆனால் மீண்டும் இந்த பிரச்சனையில் தலையிட்ட மன்சூர் அலிகான், நான் த்ரிஷாவிடம் மன்னிப்பே கூறவில்லை என்றும், என்னை மரணித்து விடு என்று கூறியதை தான் பிஆர்ஓ தவறாக சித்தரித்து மன்னித்துவிடு என்று குறிப்பிட்டு விட்டார் என்றும் கூறியிருந்தார். மேலும் அந்த வீடியோவை முழுவதுமாக பார்க்காமலேயே தன்னை அவதூறு செய்து விட்டதாக கூறி, திரிஷா, குஷ்பூ மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என மான நஷ்ட வழக்கை அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்டறிந்து நீதிபதி, எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறும் மன்சூர் அலிகான், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காகவா மன்னிப்பு கூறினார் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். வழக்கு தொடர்பாக த்ரிஷா குஷ்பூ ஆகியோ பதிலளிக்க கூறி, விசாரணையை டிசம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.





