கடந்த 2005ம் ஆண்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் இயக்கத்தை நடிகர் விஜயகாந்த் துவக்கினார். அவருக்கு தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்த நிலையில் அவரது கட்சி 2011ல் சந்தித்த இரண்டாவது சட்டசபை தேர்தலிலேயே அவர் எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்தார்.
அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் திமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளிய தேமுதிக இரண்டாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் சில ஆண்டுகள் வீட்டில் ஓய்வெடுத்த நிலையில் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.
அவரது மறைவுக்குப் பிறகு தேமுதிக கட்சி அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மைத்துனர் எல் கே சுதீஷ் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்து சட்டசபை தேர்தலை சந்தித்தது. அப்போது 10 இடங்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் அந்த கட்சியை விட்டு விலகி தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். அவருக்கு கடந்த 3 முறையாக தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த நிலையில் இந்த முறை அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மீசை ராஜேந்திரன் கூறியதாவது, நான் தேமுதிகவில் முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவன்.
ஆனால் எனக்கு இந்த முறை தேர்தல் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. நிச்சயமாக கேப்டன் இருந்திருந்தால் நான் கட்சியை விட்டு வெளியே வந்திருக்க மாட்டேன். ஏனென்றால் அவர் என்னை அழைத்து பேசியிருப்பார். என்னை அரவணைத்து செல்வார். ஆனால் இப்போது தேமுதிகவில் அப்படி இல்லை. கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு விசுவாசிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.
என்னை போன்ற கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு இப்படி ஒரு நிலைமை என்றால் மற்றவர்கள் நிலை என்ன என்பதையும் அங்கு இருப்பவர்கள் யோசிப்பார்கள். விஜயகாந்த் போலவே விஜயும் தனது ரசிகர்கள் மீது தொண்டர்கள் மீது அதிக அக்கறையும் அன்பும் கொண்டவர். அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள்தான் இன்று எம்எல்ஏக்களாக அமைச்சர்களாக உள்ளனர். எனவே தான் நான் விஜயகாந்துக்கு பதிலாக விஜயை என் தலைவராக ஏற்றுக்கொண்டு தவெக கட்சியில் இணைந்தேன் என்று மீசை ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.





