தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர்கள் என்றால் ஹீரோயிசம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். ரஜினி ஸ்டைலில் ரசிகர்களை கவர்ந்தால் என்றால், விஜயகாந்த் கம்பீரமான நடிப்பில் கவர்ந்தார். சத்யராஜ், சரத்குமார் போன்றவர்களின் உயரமும், உடற்கட்டு அழகான தோற்றமும் எளிதில் ரசிகர்களை கவர்ந்துவிட்டது. விஜய், அஜீத் போன்றவர்களும் ஏதோ ஒரு தனித்துவம் ரசிகர்களை அவர்கள் பக்கம் இழுத்துவிட்டது.
ஆனால் அந்த காலம் முதல் இந்த காலம் வரை நடிகைகள் என்றால் அழகாக இருக்க வேண்டும். குறிப்பாக முகத்திலேயே கவர்ச்சி தெறிக்க வேண்டும். அந்த கால நடிகைககள் முகத்தில் மட்டுமே அழகு காட்டியதால், திருமணத்துக்கு பிறகும் பல ஆண்டுகள் நடித்தார்கள். ஆனால் இன்றைய சினிமாக்களில் கவர்ச்சி என்ற நிலையை கடந்து, மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள ஆபாசமாக நடிக்கும் நடிகைகள் நீண்ட காலம் சினிமாவில் நிலைத்திருக்க முடிவதில்லை.
1980, 90களில் கவர்ச்சி நடனம், ஆபாச காட்சிகளில் நடிப்பதற்கென்றே சில நடிகைகள் இருந்தனர். அந்த சில காட்சிகளில் மட்டுமே அவர்கள் வந்துவிட்டு செல்வர். கண்டிப்பாக காபரா ஸ்டான்ஸ் எனப்படும் ஒரு ஐட்டம் சாங், வில்லன் கூடாரத்தில் கண்டிப்பாக நடக்கும் என்பது அந்த கால படங்களில் எழுதப்படாத சட்டமாக இருந்தது.
ஆனால் குஷ்பு, ரோஜா, மீனா, ரம்பா, நக்மா, ரஞ்சிதா, பானுப்பிரியா போன்றவர்கள் நடிக்க வந்தபின்பு கவர்ச்சி ஆட்டத்தையும் கதாநாயகிகளே பொறுப்பேற்றுக் கொண்டனர். கதாநாயகியாக சென்டிமென்ட் காட்சிகளிலும் அழுது நடித்தனர். ஐட்டம் பாடல்களில் தேவையான குத்தாட்டமும் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
இதில் மிக முக்கியமானவர் நடிகை குஷ்பு. கதாநாயகிகளும் ஐட்டம் சாங்குக்கு குத்தாட்டம் போடலாம் என்ற தனிப்பாதையை தமிழ் சினிமாவில் வகுத்து தந்தவர் இவர்தான். இவரது ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு சென்றதற்கு காரணம், குஷ்பு திரையில் காட்டிய அதீத கவர்ச்சியும், ஐட்டம் சாங்குக்கு அவர் போட்ட குலுக்கல் நடனமும்தான் என்றால் மிகையல்ல.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் அண்ணாமலை. இதில் இடைவேளைக்கு பிறகு ரஜினி சற்று வயதான கெட்டப்பில் வருவார். அதுபோல் அவரது மனைவியான குஷ்புவும் வயதான கெட்டப்பில் இருப்பார். ஒருநாள், வயதான கெட்டப்பில் இருந்த குஷ்புவை உற்று பார்த்தபடி இருந்திருக்கிறார் ரஜினி. ஏன் அப்படி பார்க்கறீங்க என குஷ்பு கேட்டதற்கு, இந்த வயதான கெட்டப்பிலும் சூப்பரா ரொம்ப அழகா இருக்கீங்க, உங்களை கல்யாணம் செஞ்சுக்க போறவர், கொடுத்த வைத்தவர், என்று கூறியிருக்கிறார் ரஜினி. இப்படி ரஜினியை பேச வைத்தவர்தான் குஷ்பு. இன்றும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.





