தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகள் நடிகராக இருந்தவர் விஜய். இப்போது தமிழக முதல்வராக பதவியில் இருக்கிறார். இந்த சூழலில் முதல்வர் விஜயை சந்திக்கும் தயாரிப்பாளர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் நடிகர் சங்கத்தினர் இயக்குனர் சங்கத்தினர் பெப்சி அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் பல கோரிக்கைகளை வைக்கின்றனர்.
இதையடுத்து சமீபத்தில் முதல்வர் விஜய் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதுவரை பண்டிகை நாட்களில் ரிலீஸாகும் புதிய படங்களுக்கு ஒரு நாள் மட்டுமே சிறப்பு காட்சியுடன் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதித்தது. ஆனால் முதல்வர் விஜய், இனி 7 நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தற்போது முதல்வர் விஜயை சந்தித்த திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், குறைந்த பட்சம் டிக்கெட் விலையை ரூ. 250 ஆக உயர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதே போல் தியேட்டர் பராமரிப்பு கட்டணத்தையும் உயர்த்த கோரியுள்ளனர்.
சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் ரூ. 300 வரை டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜயிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தினர், தயவு செய்த டிக்கெட் விலையை சிறிதும் உயர்த்த வேண்டாம். தியேட்டர்களுக்கு ரசிகர்களே வர மாட்டார்கள் என்றும் கூறியிருக்கின்றனர்.
உண்மையில் தியேட்டர்களில் இப்போது உள்ள டிக்கெட் கட்டணங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு குடும்பத்துடன் படம் பார்க்க வருவதை பெரிய அளவில் பாதித்துள்ளது. பார்க்கிங் கட்டணம் கேண்டீன் சினாக்ஸ் விலைகளில் உயர்வு என ஒரு படம் பார்க்க குடும்பத்துடன் வந்தால் 1000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது.
மேலும் ஒரு வாரத்துக்கு 5 காட்சிகள் என புதிய படங்களை திரையிட்டாலும் படம் பார்க்க ரசிகர்கள் வர வேண்டும் என்றால் டிக்கெட் கட்டணம் அவர்களுக்கு ஏற்ப குறைவாக இருக்க வேண்டும். இந்த சூழலில் கட்டணங்களை உயர்த்துமாறு ஒரு தரப்பும், கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று ஒரு தரப்பும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து குழப்பத்தை தந்துள்ளன.





