நடிகர் விஜயகாந்த் நேற்று காலை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அரசு மரியாதையுடன் அவரது இறுதி சடங்கு செய்யப்படும் என அறிவித்தார்.
சாலிகிராமம் வீட்டின் முன் ரசிகர்கள் கூட்டம், கட்சியினர் கூட்டம் என அதிகளவில் மக்கள் திரண்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுங்கடங்காமல் போனதால், அங்கிருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து நேற்று மதியம் முதல் தேமுதிக அலுவலக வளாகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு பொதுமக்கள், கட்சியினர், சினிமா துறையினர் என பலதரப்பட்ட மக்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் கவுண்டமணி, டி ராஜேந்தர், கவிஞர் வைரமுத்து, ராஜ கண்ணப்பன், திராவிடர் கழகம் வீரமணி, பாரிவேந்தர் என பல முக்கிய பிரமுகர்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
நேற்றிரவு நடிகர் விஜய், விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இருந்த தேமுதிக அலுவலகத்துக்கு நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். கண்ணாடி பேழை அருகே நின்றபடி கண் கலங்கிய விஜய், பின் பிரேலமதா, அவரது மகன்களிடம் ஆறுதல் தெரிவித்து விட்டுச் சென்றார்.
அங்கும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றதால், இன்று காலை விஜயகாந்த் உடல், கோயம்பேடு கட்சி அலுவலக்ததில் இருந்து சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தொடர்ந்து லட்சக்கணக்கான ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலை பார்த்து பார்த்து கதறி அழுதபடி பலரும் செல்கின்றனர்.
இன்று மதியம் ஒரு மணி வரை சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிக்கும். அதன்பின்பு அவரது உடல் கோயம்பேடு தலைமை கட்சி அலுவலகத்துக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு தொடர்ந்து கட்சி பிரமுகர்கள். நடிகர், நடிகையர், இயக்குநர்கள் அஞ்சலி செலுத்தி வருகி்னறனர்.





