நடிகர் மிஷ்கின் என்றாலே, அவர் மிக வித்யாசமான ஒரு படைப்பாளியாக தான் இருக்கிறார். அவரது படங்களும் அதையே தான் வெளிப்படுத்தும். சைக்கோத்தனமான சில விஷயங்களை அவரது படத்தில் காட்டியிருப்பார். அதே வேளையில் அதை மிகவும் ரசிக்கும் விதமாகவும் சொல்லி இருப்பார்.
அவரது படங்களில் மிகவும் கவனம் ஈர்த்த படமாக துப்பறிவாளன் அமைந்தது. மிகச்சிறந்த படைப்பாக அதை கொடுத்திருந்தார். நடிகர் விஷாலுக்கும் அவரது சினிமா பயணத்தில் பெயர் சொல்லும் படமாக இருந்தது. ஆனால், துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பை லண்டனில் துவங்கிய நிலையில் விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் சண்டை வந்து அந்த படமே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இதற்கு பிறகு பொதுவெளிகளில், மேடைகளில் விஷாலை கண்டபடி திட்டிக்கொண்டே இருக்கிறார் மிஷ்கின். துப்பறிவாளன் 2 படத்தை நானே இயக்கி, நானே நடிக்கப் போகிறேன் என சபதம் செய்திருக்கிறார் விஷால். ஆனால் இதுவரை அவர் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பை துவங்கவில்லை. அதற்கான அறிகுறியும் இல்லை.
எனினும் மிஷ்கின் தொடர்ந்து இயக்குநராக, தயாரிப்பாளராக, இசையமைப்பாளராக தனது பங்களிப்பை தமிழ் சினிமாவில் தொடர்ந்துகொண்டே இருக்கிறார். சில படங்களில் நடிக்கவும் செய்கிறார். லியோ படத்தில் சில காட்சிகளே வந்தாலும் மிஷ்கின் நடிப்பு பலரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பூந்தமல்லியில் உள்ள ஈவிபி படப்பிடிப்பு தளத்தில் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் இயக்குநர் மிஷ்கின்தான். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பூனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவு பாடம் படித்த கவுசிகா என்பவர்தான் ஒளிப்பதிவாளராக நியமனம் செய்யப்பட்டு, படப்பிடிப்பு காட்சிகளை ஒளிப்பதிவு செய்து வருகிறார். இவருக்கு ரூ. 25 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ட்ரெயின் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ட்ரெயின் ஷூட்டிங்கை நேரில் பார்க்க சென்றிருக்கிறார். அப்போது ஒளிப்பதிவாளர் கவுசிகா ஓரமாக நின்றிருக்க படப்பிடிப்பு காட்சிகளை கேமரா பிடித்து, மிஷ்கின் எடுத்துக்கொண்டு இருந்திருக்கிறார். கேட்ட போது கேமராவை பறித்துக்கொண்டு அவரே ஷூட் செய்கிறார் என கவுசிகா புலம்பி இருக்கிறார். பின்னர் அங்கிருந்த படக்குழுவை தயாரிப்பாளர் தாணு விசாரித்த போது, எந்த ஒளிப்பதிவாளரும் ஒரே படத்துடன் இவரிடம் இருந்து ஓடி விடுவார்கள். அவர்களிடம் கேமராவை பிடுங்கி, இவரேதான் ஷூட் செய்வார். ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் கூட இவரது செயலால் கோபித்துக்கொண்டு, பாதி படத்தோடு போய்விட்டார் என்று கூறியிருக்கின்றனர்.





