நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மொத்தம் 233 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றியும் பெற்றார். அவரது கட்சி மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் அவர் தமிழகத்தில் தவெக கட்சி ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழக கவர்னர் ( பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் நேரில் நேற்று கடிதம் கொடுத்தார். இவர் கேரளம் மாநில கவர்னாக உள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
ஆனால் 118 எம்எல்ஏக்கள் ஆதரவு கொண்ட கடிதம் அளிக்கப்பட்டால் மட்டுமே தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய்க்கு கவர்னர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரும் என்று கூறப்பட்டதால் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. ஏற்கனவே காங்கிரஸ் தந்த ஆதரவு காரணமாக தவெக கட்சிக்கு 113 தொகுதிகள் கைவசம் உள்ளன.
இதற்கிடையே திமுக அதிமுக கட்சிகள் இரண்டும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதாகவும் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு இணையத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. தவெக உடன் காங்கிரஸ் இணைந்ததால் பாஜக சதி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
பாஜக தரப்பு மேலிடம் அழுத்தம் கொடுத்ததால் தான் விஜய்க்கு அழைப்பு விடுக்காமல் கவர்னர் கண்டிஷன் போடுகிறார் என்றும் விமர்சனம் எழுந்தது. இந்த சூழலில் நேற்றிரவு 11 மணியளவில் விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வே பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டதால் அந்த வாகனங்களும் பனையூரில் இருந்து புறப்பட்டுச் சென்றன.
இனி இந்த விவகாரத்தில் தவெக உச்சநீதி மன்றத்தை நாட உள்ளதாகவும் ஒரு தகவல் பரவியது. இந்த சூழலில் தற்போது தவெக தலைவர் விஜயை ஆட்சிமைக்க கவர்னர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்காத நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தவெக தலைவர் விஜய் பனையூரில் உள்ள தனது கட்சி தலைமை அலுவலகத்தில் பலத்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் ஆதரவு கிடைத்தால் மட்டுமே விஜய் ஆட்சியமைக்க முடியும் என்ற நெருக்கடி நிலை உருவாகி உள்ளதால் தவெக கட்சியினரும் தமிழக மக்களும் பலத்த குழப்பத்தில் உள்ளனர்.





