ஆறு ஆண்டுகள் என்ற நீண்ட இடைவெளிக்கு பின் இன்று தமிழ்நாடு முழுவதும் வெளியானது கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்த அயலான். டைட்டில் கார்டிலேயே மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு, புகைப்படத்துடன் நினைவுகளை தெரிவித்துள்ளது அயலான் படக்குழு. சிவகார்த்திகேயன் மீதான விமர்சனங்களை கடந்து, அயலான் வலுவாக நிற்க காரணம், இது ஏலியன் பற்றிய கதை.
குழந்தைகளுக்கான மாயஜால படமாக கருதினால், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் வகையில் சயின்டிபிக் பிக்சன் ஜானரில் படம் பயணிக்கிறது. மனித சக்தியை விட அதிக ஆற்றல் தனக்கு கிடைத்தால், இந்த உலகையே என் ஆளுமையின் கீழ் கொண்டு வருவேன் என ஆசைப்படும் கொடூர வில்லன் கையில் கிடைக்கிறது அந்த சக்தி வாய்ந்த விண்கல்.
அதை வைத்து அந்த வில்லன் ஆராய்ச்சி செய்ய, அந்த ஆராய்ச்சி கூடமே வெடித்துச் சிதறி அழிந்து போகிறது. பூமியின் தட்பவெப்பநிலை பாதிக்கிறது. விவசாய நிலங்கள் பாழாகிறது. மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கும் நிலையில், பூமியை காப்பாற்ற ஏலியன் ஒன்று பூமிக்கு வருகிறது.
ஒரு கட்டத்தில் விவசாயி சிவகார்த்திகேயனுடன் சேர்ந்துக்கொண்டு வில்லனை எதிர்க்கிறது. கடைசியில் ஏலியன், சிவகார்த்திகேயன் கூட்டணி ஜெயித்ததா இல்லையா என்பதுதான் அயலான் படத்தின் மொத்த மையக்கரு கதை. இதில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசை என்றாலும், பிஜிஎம் மில் அசத்தியவர், பாடல்களில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.
படத்தை பொருத்த வரை, பல இடங்களில் வசனங்கள் சமூக பொறுப்புணர்வு பேசுகின்றன.படத்தின் தொழில்நுட்பம் மிரட்டுகிறது. குறிப்பாக விஎப்எக்ஸ் படத்தை ஹாலிவுட் படத்தை போல திரையில் காட்டுகிறது. இயக்குநராக மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார் நேற்று இன்று நாளை புகழ் மட்டுமின்றி இனி அயலான் பட இயக்குநர் ரவிக்குமார் என்றும் சொல்லலாம்.
படத்தில் யோகிபாபு, கருணாகரன் என காமெடிக்கு பஞ்சமில்லை. அவர்கள் இடம்பெறும் பல காட்சிகளில் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்திருக்கின்றனர். என்றாலும் இன்னும் சற்று பெஸ்ட் ஆக கொடுத்திருக்கலாம். படத்தின் இடைவேளைக்கு பிறகு நீளும் காட்சிகளை சற்று வெட்டி இருக்கலாம். மொத்தத்தில் அயலான் ரசிகர்களின் மனங்களை வெல்வான் என்பதில் ஐயமில்லை. 10க்கு 8 நட்சத்திரங்களை அயலான் பெறுகிறான்.





