முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் தொடர்ந்து திரைப்படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இதுவரைக்கும் 25க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து விட்டார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் ஹேப்பி ராஜ். அந்தப் படத்தை தொடர்ந்து ஜீவி பிரகாஷ் நடித்துள்ள படம் இம்மார்டல்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருக்கிறார். புதுமுக இயக்குனர் மாரியப்பா சின்னா இந்த படத்தை டைரக்ட் செய்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். ஜீவி பிரகாஷ் கயாடு லோஹர் இடையேயான காதலும் அதற்கிடையே ஒரு வீட்டில் நடக்கும் பயங்கர சம்பவங்களும் படத்தின் மையக்கதையாக உள்ளது.
காதல் கலந்த ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வருகிற 23ம் தேதி இம்மார்டல் படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் அந்த நாளில் நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதனால் இம்மார்டல் படத்தின் ரிலீஸ் வருகிற செப்டம்பர் 4ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஜீவி பிரகாஷ், தளபதி வந்தா தள்ளிப்போயித்தானே ஆகணும்? அதுவும் ஒன் லாஸ்ட் டைம். ஜனநாயகன் குழுவுக்கு வாழ்த்துகள் என்று அதில் கூறியிருக்கிறார். மேலும் நடிகர் விஜய் நடித்த படம் வருவதால் மற்ற சில தமிழ் படங்களும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாளை 17ம் தேதி அர்ஜூனன் பேர் பத்து, அருள்வான், அன்பே டயானா, டார்க் ஹெவன், கண்ணிமைக்கும் நேரத்தில், நாடோடி கூட்டம் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அர்ஜூனன் பேர் பத்து படம் ஏற்கனவே ரிலீஸ் இருந்து தேதி தள்ளிப் போய்விட்டது. நேற்று டார்க் ஹெவன் படமும் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக அறிவித்தனர். விஜயின் ஜனநாயகன் படம் திரைக்கு வருவதால் இந்த 2 படங்களும் தள்ளிப் போய்விட்டன.
அன்பே டயானா அருள்வான் படங்களின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டுள்ளதால் அந்த படங்கள் நாளை 17ம் தேதி வெளியாவது உறுதியாகி விட்டது. மற்ற 2 படங்கள் திரைக்கு வருமா என்பது உறுதியாக தெரியவில்லை. வரும் 23ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் 24 மற்றும் 31ம் தேதி ரிலீஸ் செய்ய இருந்த படங்கள் தள்ளி போக அதிக வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் அந்த படங்கள் வெளியாகலாம்.





