நடிகர் விஜயகாந்த் கடந்த ஆறேழு ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்தான் இருந்தார். எனினும் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை.
தேமுதிக கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதாவும், மைத்துனர் சுதீஷூம் கவனித்துக்கொண்டனர். அவ்வப்போது கேப்டனின் மூத்த மகன் விஜயபிரபாகரன், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி, தொண்டர்களை உற்சாகப்படுத்தி வந்தார். அவரை சின்ன கேப்டன் என கட்சித்தொண்டர் அழைக்கின்றனர்.
விஜயகாந்தை பொருத்தவரை, தீவிர எம்ஜிஆர் ரசிகராக இருந்திருக்கிறார். ஆனால் அதை அவரது படங்களில் பெரும்பாலும் வெளிப்படுத்தியது இல்லை. ஆனால் கருணாநிதி ஆதரவாளராக பலமுறை தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். மதுரையில் நடந்த விஜயகாந்த் – பிரேமலதா திருமணத்தை தலைமையேற்று, தாலி எடுத்துக்கொடுத்து நடத்தி வைத்ததே கருணாநிதிதான்.
ஆனால் தேமுதிக கட்சி ஆரம்பித்தவுடன் முதலில் விஜயகாந்த் கடுமையாக விமர்சித்ததே கருணாநிதியை தான். திமுக ஆட்சியை, அதிமுக ஆட்சியை, அவர்களது ஆட்சிக்காலத்தில் செய்த ஊழலை கடுமையாக பொதுவெளியில் எதிர்த்தும், கண்டித்தும் பேசியவர் விஜயகாந்த் மட்டுமே. அதனால்தான் சகல தரப்பினரும் அவரது கட்சிக்கு ஆதரவு தந்து ஓட்டளித்தனர்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக உடல் நலம் பாதித்திருந்த விஜயகாந்த், உடல்நலம் மிக மோசமடைந்து கடந்த மாதம் 28ம் தேதி மறைந்தார். அவரது நினைவேந்தல் கூட்டம், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் அவரது மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் கலந்துக்கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய விஜயபிரபாகரன், இறக்கும் வரை அப்பா, நல்ல நினைவுத்திறனுடன் இருந்தார். அவர் ஞாபக சக்தி இல்லாமல் இருந்தார் என்பது உண்மையல்ல. வதந்திதான். அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் வீட்டில் வேலை செய்யும் குமார், சோமு இருவரிடமும் சொல்லி, அவரது படங்களின் பாடல்களை போடச் சொல்லி அந்த பாடல்களை தாளம் போட்டு கேட்டு ரசித்துள்ளார். அவர்கள் இரண்டு பேரும் சொன்ன பிறகு, சிசிடிவியில் பார்த்த போதுதான், இதுவே எங்களுக்கு தெரிந்தது, என்று கூறினார்.





