நடிகர் விஜய் அரசியல் களத்தில் குதிக்க ஆயத்தமாகி விட்டார். தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சி பெயரை அறிவித்து விட்டார். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளை நியமித்து விட்டார். வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, தொழில்நுட்ப அணி என அமைப்பு சார்ந்த நிர்வாகிகளையும் உருவாக்கி விட்டார்.
தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்கள் விரும்பும் நல்லாட்சியை தர வேண்டும் என்ற லட்சியத்தில் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறிய விஜய், இப்போது நடித்து வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம், அதன்பிறகு விஜய் 69 படம் ஆகியவற்றுடன் சினிமாவில் இருந்து விலகி விடுவதாக அறிவித்து விட்டார்.
விஜய் அரசியல் வருகை குறித்து அதிகளவில் எதிர்மறை விமர்சனங்கள் எழவில்லை. ஏனெனில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக தமிழக அரசியலில் புதிய நபர் வேண்டும் என்ற எண்ணமே, தமிழக மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது. அதுவே விஜய்க்கு பாதி வெற்றியாக மாறி இருக்கிறது.
நடிகர் விஜய்க்கு சினிமா கலைஞர்கள் தரப்பில் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், சிலம்பரசன், விஜய் சேதுபதி ஆகியோர், சினிமாவில் விஜய் விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க போட்டி போட்டு வர, வருங்காலத்தில் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் ஜெயம் ரவியிடம், நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது ஜெயம் ரவி, நடிகர் விஜய் அரசியலுக்கு சென்று விட்டார். அவர் இனி படங்களில் நடிக்க மாட்டார் என வருந்த வேண்டியது இல்லை. அவர் நிறைய நல்ல படங்களை தந்திருக்கிறார். அதை மீண்டும் பார்க்கலாமே, என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பதிலளித்த தமிழ் சினிமா ரசிகர்கள், விஜய் டாப் லெவலில் இருந்துவிட்டு அரசியலுக்கு சென்றவர். ஆனால் பல ஆண்டுகளாகவே நீங்கள் நடித்த படங்கள் பிளாப் ஆகி வருகின்றன. ஜெயம், தனி ஒருவன், போகன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி நல்ல படங்கள்தான். அதையே நாங்களும் பார்த்துக் கொள்கிறோம். நீங்களும் கிளம்புங்க, என பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.





