நடிகை திரிஷா தமிழ் சினிமாவில், 20 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜீத் என முன்னணி நாயகர்களுடன் நடிக்கிறார். இப்போது தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடிக்கிறார். விடாமுயற்சி படப்பிடிப்பில் தற்போது அஜீத்குமாருடன் நடித்து வருகிறார்.
இரு தினங்களுக்கு முன், அதிமுக மாஜி நிர்வாகி ஒருவர் சில விஷயங்களை பேசி இருந்தார். அப்போது 2017ம் ஆண்டில், கட்சி தாவலை தடுப்பதற்காக கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது நடந்த சம்பவமாக நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் குறித்த ஒரு அவதூறான தகவலை வெளியிட்டார்.
இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு கலைத்துறையினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகை திரிஷா, இதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார். நடிகர் கருணாஸ், இதுகுறித்து நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இன்னும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக, நடிகை திரிஷாவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த ஒரு பெருத்த முட்டாள், கலைத்துறை சார்ந்த ஒரு சக கலைஞரை பற்றி கேவலமாக பேசியதை கேள்விப்பட்டேன். அந்த பெரும் முட்டாள் விளம்பரத்துக்காக அப்படி பேசியிருப்பதால், நானும் அவரது பெயரை குறிப்பிட்டு விளம்பரப்படுத்த விரும்பவில்லை.
உங்களின் மனச்சாட்சியற்ற இந்த சொற்களால், உங்கள் இல்லத்தில் உள்ள பெண்களின் மனநிலையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த பூமியில் உங்களை போன்ற மனித தன்மையற்ற நபர்களும் இருக்கிறார்கள் என்பதை எண்ணி வேதனை அடைகிறேன். இப்படி கீழ்த்தரமான எண்ணங்கள் கொண்ட உங்களைப் போன்றவர்கள் மக்கள் பணி செய்வதே கேள்விக்குறிதான்.
இந்தப்பதிவு நடிகர் சங்க பொதுச் செயலாளர் என்ற முறையில் இல்லை. சக கலைஞனாகவும், பெண்களை இழிவுப்படுத்தி பேசிய உங்களை சக மனிதனாகவும் வன்மையாக கண்டிக்கிறேன். உங்களின் அறிவற்ற செயலை புரிந்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். உங்களுக்கு ஒருவேளை புரியவில்லை என்றால், உங்களை விட அதிகமாக படித்த அருகில் உள்ள் 2ம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் கேட்டு அறிந்துக்கொள்ளுங்கள், என கிண்டலாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.





