தமிழ் சினிமாவில் சென்டிமென்ட் என்பது, அந்த காலம் முதல் இந்த காலம் வரை இருந்து வருகிறது. சினிமாவில் இதுபோன்ற காட்சிகளில் நடித்தாலோ, இதுபோன்ற கேரக்டரில் நடித்தாலோ, இந்த நடிகர், இந்த நடிகை, இந்த டைரக்டர், இந்த இசையமைப்பாளர் படங்கள் என்றாலே அந்த படங்கள் பெரிய வெற்றி வாய்ப்பை பெறாது என பலரும் கூறுவதுண்டு.
குறிப்பிட்ட ரகம் காரை வாங்கினால் கூட சினிமா வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்ற சென்டிமென்ட் பார்த்தவர்கள் உண்டு. அதே போல் தொடர்ந்து தோல்வி படங்களை தந்த நடிகர்கள், இயக்குநர்கள், நடிகைகள் திரையுலகில் நீடிக்காமல் போகவும் இந்த சென்டிமென்ட் காரணமாகி இருக்கிறது. ஏனெனில் ஒருமுறை தோற்றால் மீண்டும் ஜெயிக்க மாட்டார்கள் என்ற சென்டிமென்ட் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பே கிடைக்காமலும் செய்திருக்கிறது.
சென்டிமென்ட் பார்ப்பது மூட நம்பிக்கை என, படங்களிலேயே பல நடிகர்கள் கருத்து பேசுவார்கள். டைரக்டர்களும் அதுபோன்ற காட்சிகளை வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களே இதுபோன்ற சென்டிமென்ட் பார்ப்பவர்களாக இருப்பர் என்பதுதான் நிஜத்தில் உண்மையாக இருக்கிறது. அந்த வகையில் நடிகர்களை பாடாய்படுத்துகிற விஷயம் இந்த 50, 100 சென்டிமென்ட்தான்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த 100வது படம் ஸ்ரீ ராகவேந்திரா, கமல்ஹாசன் நடித்த 100வது படம் ராஜ பார்வை இந்த இரண்டு படங்களுமே ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு செம பிளாப் தந்த படங்கள். பிரபு நடித்த 100வது படம் ராஜகுமாரன். அதுவும் தோல்வி படம்தான். அதே போல் சத்யராஜ் நடித்த 100வது படம் வாத்தியார் வீட்டுப்பிள்ளை. இதுவும் பிளாப் ஆன படம்தான்.
இந்த சென்டிமெண்டில் தப்பி ஜெயித்த நடிகர்களும் உண்டு. எம்ஜிஆர் நடித்த 100வது படம் ஒளிவிளக்கு, ஹிட் படமாக அமைந்தது. அதே போல் விஜயகாந்த் நடித்த 100வது படம் கேப்டன் பிரபாகரன் செம ஹிட் ஆனது. அதே போல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 100வது படம் நவராத்திரி. அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த 100வது படம் சென்டிமென்டில் எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த் மட்டுமே பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றனர்.
மற்றபடி ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என முன்னணி நடிகர்கள் தந்தது தோல்வி படம். சமீபத்தில் கார்த்தி நடித்த 25வது படம் ஜப்பான் படம் ஊத்திக்கொண்டது. இனி விஜய் சேதுபதி நடிப்பில் 50வது படம் மகாராஜா வெளியாகிறது. தொடர்ந்து அவர் நடித்த படங்கள் பிளாப் ஆகி வருவதால், 50வது படமாவது கை கொடுக்குமா, அல்லது 50வது படம் என்ற சென்டிமென்டில் கவிழ்த்து விடுமா, என குழப்பத்தில் சினிமா ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.





