தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களை கச்சிதமாக எடுப்பதற்கு என்று ஒரு சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஹரி, கே எஸ் ரவிக்குமார் என நீளும் இந்த பட்டியலில் நிச்சயமாக லிங்குச்சாமிக்கும் ஒரு இடம் உண்டு. அதற்குக் காரணம் அவர் ஆரம்ப காலகட்டத்தில் எடுத்த சூப்பர் ஹிட் திரைப்படங்கள் தான்.
இவரது முதல் திரைப்படமாக ஆனந்தம் வெளியானது. இப்போது நாம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று கூறி வரும் சூழலில், அப்போதே அதற்கு ஏற்றார் போல் கனகச்சிதமாக திரைக்கதையை அமைத்து ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை ஆனந்த படுத்தியவர் இயக்குனர் லிங்குசாமி.
இந்த திரைப்படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியினால், பலருக்கும் லிங்குசாமி மீது கவனம் திரும்பியது. தன் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பிற்கு எந்த ஒரு குறையையும் வைக்காமல் ஒவ்வொரு திரைப்படத்திலும் சொல்லி அடித்த கில்லியாக வேலை பார்த்தார் லிங்குசாமி. இதற்கு உதாரணமாக ரன் திரைப்படத்தைக் கூறலாம்.
முழுக்க முழுக்க கமர்சியல் கலந்த காதல் திரைப்படமாக உருவான ரன், திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. வெறும் சாதாரண கதை தான் என்றாலும், தனது திறமையான திரைக்கதையினால் அதை ஜெட் வேகத்தில் எடுத்திருந்தார் லிங்குசாமி. இதனைத் தொடர்ந்து சண்டக்கோழி திரைப்படம் லிங்குச்சாமிக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது.
தொடர்ந்து பையா, வேட்டை உள்ளிட்ட திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து அவர் ஆனந்த படுத்தினார். ஆனால் இதன் பிறகு இந்து சாமிக்கு சரியான காலம் அமையவில்லை என்று தான் கூற வேண்டும். அவரது அஞ்சான், சண்டக்கோழி 2 திரைப்படங்கள் வெற்றி பெறாமல் மண்ணைக் கவின. இப்படியான சூழலில் தற்போது அவர், பையா திரைப்படத்திற்கான ரீ ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகிறது.
இப்படியான சூழலில் படத்தில் இருந்து ஒரு ருசிகரமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பையா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் முதலில் வேறு ஒன்றாக இருந்ததாம். படத்தின் இறுதிக் காட்சியில், வில்லன்களை கார்த்தி அடித்து நொறுக்கிய பிறகு அவரது நண்பர்கள் தமன்னாவிடம் கார்த்தியின் காதலைப் பற்றி கூறுவது போல் காட்சி இருக்கும். ஆனால் முதல் கிளைமாக்ஸில் அவர் அப்படி எடுக்கவில்லையாம். கார்த்தியிடம் தமன்னா தனது காதலை கூறுவது போல தான் முதலில் கிளைமேக்ஸ் இருந்ததாம். அவர் வில்லன்களை அடிக்கும்படி கூற, அதன்பிறகு கார்த்தி எதிரிகளை துவம்சம் செய்வாராம். ஆனால் ஏதோ ஒரு தயக்கத்தில் அந்த காட்சியை வைக்காமல் இப்படி படம் எடுத்ததாக லிங்குசாமி தெரிவித்திருக்கிறார்.





