முத்துக்கு முத்தாக மிளகா நம்ம வீட்டுப்பிள்ளை மகாராஜா சதுரங்க வேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நட்டி என்கிற நடராஜ். இவர் நடிகர் மட்டுமல்ல, பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். குறிப்பாக விஜய் நடித்த யூத் மற்றும் புலி ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் நட்டி தான். ஆனால் இப்போது படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறார்.
இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நட்டி நடராஜ் நடித்த படம் சதுரங்க வேட்டை. இந்த படத்தில் மோசடி பேர்வழியாக நட்டி அட்டகாசமாக நடித்திருப்பார். படத்தின் நாயகன் அவர்தான் என்றாலும் படம் முழுவதும் மற்றவர்களை பணத்துக்காக ஏமாற்றிக்கொண்டே இருப்பார். நட்டி நடித்த படங்களில் சதுரங்க வேட்டை அவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.
இந்நிலையில் நடிகர் நட்டி நடராஜ் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் கம்பி கட்ன கதை. இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இயக்குனர் ராஜநாகம் பெரியசாமி இந்த படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீ ரஞ்சனி சிங்கம் புலி ஜாவா சுந்தரேசன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இதில் நட்டி போலி சாமியராக நடித்திருக்கிறார்.
கம்பி கட்ன கதை படம் குறித்து இயக்குனர் ராஜநாகம் பெரியசாமி கூறியதாவது, போலி சாமியார் காமெடி ஏமாற்று வேலை இந்த மூன்று வேலையும் யாரால் சிறப்பாக செய்ய முடியும் என்று யோசித்தபோது உடனடியாக எங்கள் மனகதுக்குள் வந்தவர் நட்டி தான். அவரை தவிர வேறு யாருமே செய்ய முடியாது என்பதால் அவரை போராடி இந்த கேரக்டரில் நடிக்க வைத்தோம் என்று கூறியிருக்கிறார்.
இந்த படம் குறித்து நடிகர் நட்டி நடராஜ் கூறியதாவது, சினிமாவில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க தயாராக இருக்க வேண்டும். அப்படித்தான் நான் படங்களில் செயல்பட்டு வருகிறேன். அதன் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமே என்கிற மகிழ்ச்சிதான் உள்ளது. என்னை பொறுத்தவரை சினிமாவுக்காக எதையும் செய்யலாம். தொடர்ந்து முழு உழைப்பையும் சினிமாக்கு தருவேன் என்று நட்டி கூறியிருக்கிறார்.
நடிகர் சந்தானம் கலகலப்பு என்ற படத்தில், கிளைமாக்ஸில் ஒரு அடியாளை பார்த்து என்னிடம் அடிவாங்குவதற்கு என்றே அளவெடுத்து செஞ்ச மாதிரி இருக்கான் என்று காமெடியாக டயலாக் பேசுவார். அதுபோல் தமிழ் சினிமாவில் மோசடி போ்வழியாக நடிக்க அளவெடுத்து செஞ்ச ஒரு நடிகராக நட்டி இயக்குனர்களுக்கு தெரிகிறாரோ, எல்லாம் சதுரங்க வேட்டை படத்துக்கு கிடைத்த வெற்றிதான் என்று ரசிகர்கள் நட்டியை பாராட்டி வருகின்றனர்.





