- Advertisement -
Homeபொழுதுபோக்குஆர்வமாக மனைவியுடன் ஓட்டு போட வந்த நடிகர் சூரி; சாலிகிராமம் வாக்குச்சாவடியில் நடந்தது என்ன? -...

ஆர்வமாக மனைவியுடன் ஓட்டு போட வந்த நடிகர் சூரி; சாலிகிராமம் வாக்குச்சாவடியில் நடந்தது என்ன? – காமெடி நடிகரே கலங்கிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில், துணை நடிகராக தனது சினிமா பயணத்தை துவக்கியவர் நடிகர் சூரி. துவக்கத்தில் காதல், தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் பத்தோடு பதினொன்றாக துணை நடிகர்களில் ஒருவராக கூட்டத்தில் நின்றிருப்பார் சூரி. அப்போது அவர் யாரென்றே ரசிகர்களுக்கு தெரியாது. இப்போது சூரி முன்னணி நடிகரான பின், அந்த படங்களை பார்க்கும் போது அவர் அந்த படங்களில் நடித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறது.

நடிகர் சூரிக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த படம் வெண்ணிலா கபடிக் குழு. இந்த படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் சவாலில் கலந்து கொண்டு, அந்த காமெடியால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், ஜில்லா என பல படங்களில் காமெடி செய்து ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார். முன்னணி ஹீரோக்களுடன் நடித்து, முன்னணி காமெடி நடிகராக சூரி மாறினார்.

இந்நிலையில் டைரக்டர் வெற்றிமாறன், அவரை தனது விடுதலை படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். இந்த படத்தில் குமரேசன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடிகர் சூரியின் நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து இப்போது விடுதலை 2 படத்திலும், அவர் நடித்துள்ளார். அது தவிர கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டுமின்றி இப்போது ஒரு படத்துக்கு ரூ. 8 கோடி சம்பளம் பெறும் நடிகர் சூரி, இந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறும் பட்சத்தில், இன்னும் கணிசமாக தன் சம்பளத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.

இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்ய, நடிகர் சூரி இன்று காலை தன் மனைவியுடன் சென்றார். அப்போது அவருக்கு வாக்காளர் பெயர் பட்டியலில், அவர் பெயர் இல்லை என்று கூறி அவர் ஓட்டு போட முடியாது என திருப்பி அனுப்பி விட்டனர். இது குறித்து நடிகர் சூரி வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். இந்த முறை என் பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் என் மனைவியின் பெயர் உள்ளது. அவர் ஓட்டு போட்டு விட்டார். எனக்கு ஓட்டு இல்லை என்று கூறிவிட்டனர்.

இதில் யார் தவறு செய்தது என்று தெரியவில்லை. மற்றவர்கள் எல்லாம் ஓட்டு போட்டுவிட்டு, ஓட்டு போடுங்கள் என்று சொல்வார்கள். ஆனால், நான் என் ஓட்டை போட முடியாத வேதனையில் சொல்கிறேன். நீங்கள் உங்களுடைய ஓட்டுகளை கண்டிப்பாக பதிவு செய்யுங்கள். என்னுடைய ஓட்டை பதிவு செய்ய முடியாதது எனக்கு மிகவும் வருத்தமாக, வேதனையாக உள்ளது. ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று ஆர்வமாக வந்தேன். ஆனால், அது என்னால் செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனால், அடுத்த தேர்தலில் கண்டிப்பாக எனது வாக்கை பதிவு செய்வேன் என்று சூரி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சற்று முன்