நடிகர் தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து திருடா திருடி, சுள்ளான், படிக்காதவன், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோ ஆனார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம், தனுஷ்க்கு நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தது. வேலையில்லா பட்டதாரி, அசுரன் போன்ற படங்களில் முதிர்ச்சியான நடிப்பை தந்து அசத்தினார் தனுஷ். ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்ட தனுஷ், கடந்தாண்டு அவரை விட்டு பிரிந்தார்.
தனுஷை பொருத்த வரை, தனக்கு தரப்படும் கேரக்டர்களை உள்வாங்கி நடிக்கும் ஆற்றல் மிக்கவர். குறிப்பாக அவரது படங்களில் புதுப்பேட்டை படம், சென்னையில் வாழும் ரவுடிகளின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருந்தது. மிகவும் தத்ரூபமாக இந்த படத்தில் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார் தனுஷ்.
தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் தங்களது படங்களை பிரமோசன் செய்வதன் வாயிலாக, அந்த படத்துக்கு மிகப்பெரிய ஒரு விளம்பரத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விடுகின்றனர். பர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் பெயர் அறிவிப்பு, மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு, இசை வெளியீட்டு விழா, டீசர் வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீட்டு விழா என தொடர்ந்து படத்துக்கான பிரமோசன்களை செவ்வனே செய்து வருகின்றனர்.
அந்த வகையில் லியோ படத்தின் வெற்றி விழா, சமீபத்தில் சென்னை இன்டோர் ஸ்டேடியத்தில் நடந்தது. பல ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் கெத்து காட்டினார் விஜய். அதேபோல், தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளில் 25 படங்களில் நடித்த நடிகர் என்ற வகையில் கார்த்தி 25 என்ற நிகழ்ச்சி, கடந்த 28ம் தேதி இரவு நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடந்தது. சூர்யா, கார்த்தி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றனர்.
இப்போது அதே பாணியில், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை, நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தனுஷூம் தன் ரசிகர்களை தமிழகம் முழுவதும் இருந்து வரவழைத்து, பிரமாண்டமாக கூட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார். இப்படியே நடிகர்கள் கெத்து காட்டும் இடமாக நேரு இன்டோர் ஸ்டேடியம் மாறிப் போனதால், இதுக்கு ஒரு எண்டு கார்டு போடுங்கப்பா என, பலரும் கலாய்த்து வருகின்றனர். ஏனெனில், இங்கு விளையாட்டுகளை விட, சினிமா நிகழ்ச்சிகளே அதிகமாக நடந்து வருகிறது.





